அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணத்தில் இரவில்) ஓய்வெடுப்பதற்காகத் தங்கினோம்; சூரியன் உதிக்கும் வரை நாங்கள் விழிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வொருவரும் தம் வாகனத்தின் தலைக்கயிற்றைப் பிடித்துக் (கொண்டு இங்கிருந்து சென்று) கொள்ளட்டும். ஏனெனில், இது ஷைத்தான் நம்மிடம் வந்த இடமாகும்” என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே செய்தோம்.
பிறகு அவர்கள் தண்ணீர் கேட்டு (பெற்று), உளூச் செய்தார்கள்; பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.
யஃகூப் (என்பவர்), “பின்னர் அவர்கள் இரண்டு ஸஜ்தாக்கள் தொழுதார்கள்” என்று கூறினார்கள்.
பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது; அவர்கள் காலைத் தொழுகையைத் தொழுதார்கள்.