இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும், "அல்லாஹும்ம ரப்பனா வலகல் ஹம்த்" (இறைவா! எங்கள் இரட்சகனே! உனக்கே எல்லாப் புகழும்) என்று கூறினார்கள். பிறகு "அல்லாஹும்ம ல்அன் ஃபுலானன் வஃபுலானன்" (இறைவா! இன்னாரையும் இன்னாரையும் சபிப்பாயாக!) என்று கூறுவதை அவர் கேட்டார். அப்போது அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளினான்:
"(நபியே!) இந்த(க் காரியத்தின்) முடிவு உமக்குரியதன்று; அவன் அவர்கள் மீது கருணை கொண்டு அவர்களை மன்னிப்பதா அல்லது அவர்களைத் தண்டிப்பதா (என்பது அவனுடையதே); ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள்." (திருக்குர்ஆன் 3:128)
அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுவதைக் கேட்டதாக அறிவித்தார்கள்:
"ஒரு நீதிபதி தீர்ப்பளிக்கும்போது, (சரியான முடிவை எட்டுவதற்காக) தன்னால் இயன்றவரை முழுமையாக முயற்சி செய்து (இஜ்திஹாத் செய்து), பின்னர் அவர் சரியாகிவிட்டால், அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. மேலும் அவர் தீர்ப்பளிக்கும்போது, (சரியான முடிவை எட்டுவதற்காக) தன்னால் இயன்றவரை முழுமையாக முயற்சி செய்து (இஜ்திஹாத் செய்து), பின்னர் அவர் தவறிழைத்துவிட்டால், அவருக்கு ஒரு நன்மை உண்டு."