حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي
يُونُسُ بْنُ يُوسُفَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ تَفَرَّقَ النَّاسُ عَنْ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ لَهُ نَاتِلُ
أَهْلِ الشَّامِ أَيُّهَا الشَّيْخُ حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
نَعَمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ
عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ قَاتَلْتُ فِيكَ
حَتَّى اسْتُشْهِدْتُ . قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ قَاتَلْتَ لأَنْ يُقَالَ جَرِيءٌ . فَقَدْ قِيلَ . ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ
عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ
نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ تَعَلَّمْتُ الْعِلْمَ وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ . قَالَ
كَذَبْتَ وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ . وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ هُوَ قَارِئٌ . فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ
بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ . وَرَجُلٌ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ
الْمَالِ كُلِّهِ فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ
تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلاَّ أَنْفَقْتُ فِيهَا لَكَ قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ هُوَ جَوَادٌ . فَقَدْ قِيلَ
ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ .
சுலைமான் இப்னு யஸார் அவர்கள் கூறினார்கள்:
மக்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களைச் சுற்றியிருந்து கலைந்து சென்றனர். அப்போது ஷாம் (சிரியா) நாட்டைச் சேர்ந்த நாத்தில் என்பவர் அவரிடம், "ஷைகே! தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு ஹதீஸை எங்களுக்கு அறிவியுங்கள்" எனக் கூறினார். அதற்கு அவர், "ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்:
மறுமை நாளில் மக்களில் முதன்முதலாக யாருக்குத் தீர்ப்பளிக்கப்படுமோ அவர், இறைவழியில் உயிர்த்தியாகம் செய்த ஒரு மனிதராவார். அவர் கொண்டுவரப்படுவார். அல்லாஹ் அவருக்குத் தன் அருட்கொடைகளை நினைவுபடுத்துவான்; அவரும் அவற்றை அறிந்துகொள்வார். பிறகு (இறைவன்), 'இதற்குப் பகரமாக நீ என்ன செய்தாய்?' என்று கேட்பான். அதற்கு அவர், 'நான் உனக்காகப் போரிட்டேன்; இறுதியில் உயிர்த்தியாகம் செய்யப்பட்டேன்' என்று கூறுவார். இறைவன், 'நீ பொய் சொல்கிறாய். எனினும், "வீர தீரமிக்கவர்" என்று சொல்லப்படவே நீ போரிட்டாய்; அவ்வாறே சொல்லப்பட்டது' என்று கூறுவான். பிறகு அவரைக் குறித்துக் கட்டளையிடப்பட்டு, அவர் முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசப்படுவார்.
பிறகு, கல்வியைக் கற்று, அதைப் (பிறருக்குக்) கற்பித்து, குர்ஆனை ஓதிய ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அல்லாஹ் அவருக்குத் தன் அருட்கொடைகளை நினைவுபடுத்துவான்; அவரும் அவற்றை அறிந்துகொள்வார். பிறகு (இறைவன்), 'இதற்குப் பகரமாக நீ என்ன செய்தாய்?' என்று கேட்பான். அதற்கு அவர், 'நான் கல்வியைக் கற்றேன்; அதைக் கற்பித்தேன்; உனக்காக குர்ஆனை ஓதினேன்' என்று கூறுவார். இறைவன், 'நீ பொய் சொல்கிறாய். எனினும், "அறிஞர்" என்று சொல்லப்படவே நீ கல்வியைக் கற்றாய்; "காரீ" (குர்ஆனை ஓதுபவர்) என்று சொல்லப்படவே குர்ஆனை ஓதினாய்; அவ்வாறே சொல்லப்பட்டது' என்று கூறுவான். பிறகு அவரைக் குறித்துக் கட்டளையிடப்பட்டு, அவர் முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசப்படுவார்.
பிறகு, அல்லாஹ் யாருக்கு விசாலமான வசதியளித்து, அனைத்து விதமான செல்வங்களையும் வழங்கினானோ அத்தகைய ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அல்லாஹ் அவருக்குத் தன் அருட்கொடைகளை நினைவுபடுத்துவான்; அவரும் அவற்றை அறிந்துகொள்வார். பிறகு (இறைவன்), 'இதற்குப் பகரமாக நீ என்ன செய்தாய்?' என்று கேட்பான். அதற்கு அவர், 'நீ எந்த வழிகளிலெல்லாம் செலவு செய்யப்படுவதை விரும்புவாயோ, அந்த வழிகள் எதையும் விட்டுவிடாமல் உனக்காக நான் செலவு செய்தேன்' என்று கூறுவார். இறைவன், 'நீ பொய் சொல்கிறாய். எனினும், "தாராள மனமுடையவர்" என்று சொல்லப்படவே நீ (இவாறு) செய்தாய்; அவ்வாறே சொல்லப்பட்டது' என்று கூறுவான். பிறகு அவரைக் குறித்துக் கட்டளையிடப்பட்டு, அவர் முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசப்படுவார்.