ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு பட்டு (மேலங்கி)யினை அணிந்தார்கள். பின்னர் அவர்கள் அதை வெகு விரைவாகக் கழற்றி, உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் வெகு விரைவாக அதை கழற்றிவிட்டீர்களே!" என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், "ஜிப்ரீல் எனக்கு அதைத் தடை செய்தார்" என்று கூறினார்கள்.
பின்னர் உமர் (ரழி) அவர்கள் அழுதுகொண்டே வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் வெறுத்த ஒன்றை எனக்குக் கொடுத்தீர்களே! அப்படியென்றால் என் நிலை என்ன? (நான் அதை அணிந்தால் எனக்கு என்ன ஆகும்?)" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் அதை நீங்கள் அணிவதற்காக உங்களுக்குக் கொடுக்கவில்லை; மாறாக நீங்கள் அதை விற்பதற்காகவே உங்களுக்குக் கொடுத்தேன்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர் அதை இரண்டாயிரம் திர்ஹங்களுக்கு விற்றார்கள்.