மிஸ்வர் இப்னு மக்ரமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அலி இப்னு அபீ தாலிப் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளான ஃபாத்திமா (ரழி) அவர்கள் தம்மிடம் (மனைவியாக) இருக்கும்போதே, அபூ ஜஹ்லின் மகளுக்குத் திருமணப் பெண் பேசினார்கள். ஃபாத்திமா (ரழி) அவர்கள் இதைக் கேள்விப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "தங்கள் புதல்வியருக்காக நீங்கள் கோபப்படமாட்டீர்கள் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இதோ அலி, அபூ ஜஹ்லின் மகளை மணமுடிக்கப்போகிறார்" என்று கூறினார்கள்.
மிஸ்வர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்கள் தஷஹ்ஹுத் மொழிந்ததை நான் கேட்டேன். பிறகு கூறினார்கள்: "அம்மா பஅத்! (இறைப்புகழுக்குப்பின்), நான் அபுல் ஆஸ் இப்னு ரபீஆவுக்கு (என் மகள் ஸைனபை) மணமுடித்துக் கொடுத்தேன். அவர் என்னிடம் (அளித்த வாக்குறுதியில்) உண்மையுடன் நடந்துகொண்டார். நிச்சயமாக ஃபாத்திமா பின்த் முஹம்மத் (முஹம்மதுடைய மகள்) என்னில் ஒரு பகுதியாவார். அவரை (சக்களத்தி சண்டைகள் அல்லது மன உளைச்சல் மூலம்) சோதனையில் ஆழ்த்துவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் எதிரியுடைய மகளும் ஒரே ஆணின் கீழ் ஒருபோதும் ஒன்று சேர முடியாது".
ஆகவே, அலி (ரழி) அவர்கள் அத்திருமணப் பேச்சை விட்டுவிட்டார்கள்.