حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ اللَّيْثِيَّ،، وَكَانَ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُخْبِرُ أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِمَارَ وَحْشٍ وَهْوَ بِالأَبْوَاءِ ـ أَوْ بِوَدَّانَ ـ وَهْوَ مُحْرِمٌ فَرَدَّهُ، قَالَ صَعْبٌ فَلَمَّا عَرَفَ فِي وَجْهِي رَدَّهُ هَدِيَّتِي قَالَ لَيْسَ بِنَا رَدٌّ عَلَيْكَ، وَلَكِنَّا حُرُمٌ .
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான சஅப் பின் ஜத்தாமா அல்-லைதீ (ரலி), தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் ‘அல்-அப்வா’ அல்லது ‘வத்தான்’ என்னுமிடத்தில் இஹ்ராம் நிலையில் இருந்தபோது ஒரு காட்டுக்கழுதையை அன்பளிப்பாகக் கொடுத்ததாகவும், அதனை நபி (ஸல்) அவர்கள் தம்மிடமே திருப்பித் தந்துவிட்டதாகவும் தெரிவித்தார்கள்.
மேலும் சஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “எனது அன்பளிப்பைத் திருப்பித் தந்ததால் என் முகத்தில் ஏற்பட்ட (வருத்தத்)தை நபி (ஸல்) அவர்கள் அறிந்துகொண்டபோது, ‘நாம் (உம்மை வெறுத்து) இதை உமக்குத் திருப்பித் தரவில்லை; ஆயினும், நாம் இஹ்ராம் நிலையில் இருக்கிறோம்’ என்று கூறினார்கள்.”
அஸ்-ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் (தமக்குத்) தெரிவித்ததாக: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்-அப்வா அல்லது வத்தான் என்னுமிடத்தில் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். ஆனால், அவர்கள் அதை என்னிடமே திருப்பிக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் முகத்தில் தென்பட்ட அதிருப்தியைப் பார்த்தபோது, ‘நாம் உம்மை(யும் உமது அன்பளிப்பையும) நிராகரிக்கவில்லை; எனினும் நாம் இஹ்ராம் அணிந்திருக்கிறோம் (என்பதாலேயே இதைத் திருப்பிக் கொடுத்தோம்)’ என்று கூறினார்கள்.”
(இமாம் திர்மிதி அவர்கள் கூறுகிறார்கள்): இந்த ஹதீஸ் ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்திலானது. நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் பிற அறிஞர்களில் ஒரு சாரார் இந்த ஹதீஸைப் பின்பற்றி, ‘இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடப்பட்ட பிராணியை உண்பது வெறுக்கத்தக்கது’ என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “எங்களைப் பொறுத்தவரை இந்த ஹதீஸின் விளக்கமானது, தமக்காகவே அது வேட்டையாடப்பட்டதாக நபி (ஸல்) அவர்கள் எண்ணியதால் அதைத் திருப்பிக் கொடுத்தார்கள்; பேணுதலுக்காகவே அதை விட்டுவிட்டார்கள் என்பதாகும்.” ஸுஹ்ரியின் மாணவர்களில் சிலர் ஸுஹ்ரி வழியாக இந்த ஹதீஸை அறிவிக்கும்போது, “காட்டுக் கழுதையின் இறைச்சியை அன்பளித்தார்” என்று அறிவித்துள்ளனர். ஆனால் அது (ஹதீஸ் விதிகளின்படி) பாதுகாக்கப்பட்ட அறிவிப்பு அல்ல. இந்த அத்தியாயத்தில் அலீ (ரலி) மற்றும் ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரிடமிருந்தும் அறிவிப்புகள் உள்ளன.