அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"நான் புளித்த ரொட்டியை உண்ணாமலும், பட்டு ஆடை அணியாமலும், எனக்குப் பணிவிடை செய்ய ஓர் ஆண் பணியாளோ பெண் பணியாளோ இல்லாத நிலையிலும் இருந்த (அக்காலத்தில்), என் வயிற்றுப் பசிக்காக நான் நபி (ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே இருப்பேன். மேலும், (பசியின் கொடுமையால்) நான் என் வயிற்றைக் கற்கள் (பரப்பிய தரை) மீது அழுத்தி வைத்துக்கொள்வேன். எனக்கு ஒரு குர்ஆன் வசனம் தெரிந்திருந்தும், யாராவது ஒருவர் (தம் வீட்டிற்கு) என்னைத் தம்முடன் அழைத்துச் சென்று எனக்கு உணவளிப்பார் என்பதற்காகவே, அவ்வசனத்தை ஓதிக்காட்டுமாறு அவரிடம் கேட்பேன். ஏழைகளிடம் (நடந்துகொள்வதில்) மக்கலிலேயே சிறந்தவர் ஜஅஃபர் பின் அபீ தாலிப் அவர்களாவார். அவர் எங்களைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று, தம் வீட்டில் இருப்பதை எங்களுக்கு உண்ணக் கொடுப்பார். (சில நேரங்களில்) ஒன்றுமே இல்லாதபோது, (நெய் அல்லது தேன் இருந்த) காலித் தோல் பையை எங்களிடம் எடுத்து வருவார்; நாங்கள் அதைக் கிழித்து அதற்குள் இருப்பதை நக்கிச் சாப்பிடுவோம்."