حَدَّثَنَا أَبُو عَامِرٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي أُسَامَةَ، قَالَ أَبُو عَامِرٍ
حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدٌ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ
صلى الله عليه وسلم وَهُوَ نَازِلٌ بِالْجِعْرَانَةِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ وَمَعَهُ بِلاَلٌ فَأَتَى رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم رَجُلٌ أَعْرَابِيٌّ فَقَالَ أَلاَ تُنْجِزُ لِي يَا مُحَمَّدُ مَا وَعَدْتَنِي فَقَالَ لَهُ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم " أَبْشِرْ " . فَقَالَ لَهُ الأَعْرَابِيُّ أَكْثَرْتَ عَلَىَّ مِنْ " أَبْشِرْ " . فَأَقْبَلَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي مُوسَى وَبِلاَلٍ كَهَيْئَةِ الْغَضْبَانِ فَقَالَ " إِنَّ هَذَا
قَدْ رَدَّ الْبُشْرَى فَاقْبَلاَ أَنْتُمَا " . فَقَالاَ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ . ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم بِقَدَحٍ فِيهِ مَاءٌ فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ وَمَجَّ فِيهِ ثُمَّ قَالَ " اشْرَبَا مِنْهُ وَأَفْرِغَا
عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا وَأَبْشِرَا " . فَأَخَذَا الْقَدَحَ فَفَعَلاَ مَا أَمَرَهُمَا بِهِ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم فَنَادَتْهُمَا أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ أَفْضِلاَ لأُمِّكُمَا مِمَّا فِي إِنَائِكُمَا . فَأَفْضَلاَ
لَهَا مِنْهُ طَائِفَةً .
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடைப்பட்ட ‘ஜிஃரானா’ என்னுமிடத்தில் (தற்காலிகமாக) தங்கியிருந்தபோது நான் அவர்களுடன் இருந்தேன். பிலால் (ரலி) அவர்களும் (அங்கு) இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, "முஹம்மதே! எனக்கு நீங்கள் வாக்களித்ததை நிறைவேற்றுங்கள்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், "நற்செய்தி பெறுவீராக" என்றார்கள். அதற்கு அந்தக் கிராமவாசி, "என்னிடம் 'நற்செய்தி' (பெறுவீராக) என்று அதிகமாகச் சொல்லிவிட்டீர்கள்" என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமுற்றவர் போன்று அபூ மூஸா மற்றும் பிலால் (ரலி) பக்கம் திரும்பி, "இவர் நற்செய்தியை நிராகரித்துவிட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள். அதற்கு அவ்விருவரும், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஏற்றுக்கொண்டோம்" என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அதில் தம் கைகளையும் முகத்தையும் கழுவினார்கள்; மேலும் அதில் வாய்க்கொப்பளித்து (அந்நீரை) உமிழ்ந்தார்கள். பிறகு, "இதிலிருந்து நீங்கள் இருவரும் குடியுங்கள்; உங்கள் முகங்களிலும் மார்புகளிலும் ஊற்றிக்கொள்ளுங்கள்; நற்செய்தி பெறுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் அப்பாத்திரத்தை எடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி செய்தார்கள். அப்போது திரைக்குப் பின்னாலிருந்து உம்மு ஸலமா (ரலி), "உங்கள் பாத்திரத்தில் உள்ளதிலிருந்து உங்கள் தாயாருக்கும் (அதாவது, எனக்கும்) மிச்சம் வையுங்கள்" என்று குரல் கொடுத்தார்கள். உடனே அவர்கள் இருவரும் அதிலிருந்து ஒரு பகுதியை அவருக்காக மிச்சம் வைத்தார்கள்.