அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உஸைத் இப்னு ஹுளைர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
ஓர் இரவில் அவர் தமது தொழுவத்தில் (அல்குர்ஆனை) ஓதிக் கொண்டிருந்தபோது, திடீரெனக் குதிரை மிரண்டு துள்ளியது. அவர் மீண்டும் ஓதினார்; (குதிரை) மீண்டும் துள்ளியது. அவர் மீண்டும் ஓதினார்; அது (முன்போலவே) துள்ளியது.
உஸைத் (ரழி) கூறினார்கள்: "அது என் மகன் யஹ்யாவை மிதித்துவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே நான் அதை நோக்கிச் சென்றேன். அப்போது (என்) தலைக்கு மேலே ஒரு விதானம் போன்ற ஒன்றைக் கண்டேன். அதில் விளக்குகள் இருப்பது போலத் தோன்றியது. அது மேலே உயர்ந்து சென்று (வானில்) மறைந்து விட்டது; என்னால் அதைப் பார்க்க முடியவில்லை."
மறுநாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு நான் எனது தொழுவத்தில் ஓதிக் கொண்டிருந்தபோது திடீரென என் குதிரை மிரண்டு துள்ளியது" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்னு ஹுளைரே! ஓதுவீராக" என்றார்கள். நான், "நான் ஓதினேன்; அது மீண்டும் துள்ளியது" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்னு ஹுளைரே! ஓதுவீராக" என்றார்கள். நான், "நான் ஓதினேன்; அது மீண்டும் துள்ளியது" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்னு ஹுளைரே! ஓதுவீராக" என்றார்கள்.
(நான் கூறினேன்): "பிறகு நான் (ஓதுவதை நிறுத்திவிட்டு) விலகிச் சென்றுவிட்டேன். யஹ்யா குதிரைக்கு அருகில் இருந்தான். அவனை அது மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். அப்போது விதானம் போன்ற ஒன்றை நான் கண்டேன். அதில் விளக்குகள் இருப்பது போலத் தோன்றியது. அது மேலே உயர்ந்து சென்று (வானில்) மறைந்து விட்டது; என்னால் அதைப் பார்க்க முடியவில்லை."
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவை வானவர்கள் ஆவர். உமது ஓதுதலைச் செவியுற்றுக் கொண்டிருந்தனர். நீர் (தொடர்ந்து) ஓதியிருந்தால் காலையில் மக்களும் அவர்களைப் பார்த்திருப்பார்கள்; மக்களிடமிருந்து அவர்கள் மறைந்திருக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள்.