حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ أَنَّ امْرَأَةً، جَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم بِبُرْدَةٍ مَنْسُوجَةٍ فِيهَا حَاشِيَتُهَا ـ أَتَدْرُونَ مَا الْبُرْدَةُ قَالُوا الشَّمْلَةُ. قَالَ نَعَمْ. قَالَتْ نَسَجْتُهَا بِيَدِي، فَجِئْتُ لأَكْسُوَكَهَا. فَأَخَذَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ، فَحَسَّنَهَا فُلاَنٌ فَقَالَ اكْسُنِيهَا، مَا أَحْسَنَهَا. قَالَ الْقَوْمُ مَا أَحْسَنْتَ، لَبِسَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم مُحْتَاجًا إِلَيْهَا، ثُمَّ سَأَلْتَهُ وَعَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ. قَالَ إِنِّي وَاللَّهِ مَا سَأَلْتُهُ لأَلْبَسَهَا إِنَّمَا سَأَلْتُهُ لِتَكُونَ كَفَنِي. قَالَ سَهْلٌ فَكَانَتْ كَفَنَهُ.
சஹ்ல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு பெண்மணி ஓரம் (விளிம்பு) கொண்ட, நெய்யப்பட்ட ஒரு புர்தாவை (ஒரு வகை போர்வை) நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். பிறகு சஹ்ல் (ரழி) அவர்கள் அங்கிருந்தவர்களிடம் புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், புர்தா என்பது ஒரு மேலாடை என்று பதிலளித்தார்கள். சஹ்ல் (ரழி) அவர்களும் அவர்களின் பதிலை உறுதிப்படுத்தினார்கள். பிறகு அப்பெண்மணி, "நான் இதை என் கைகளால் நெய்தேன்; நீங்கள் இதை அணிய வேண்டும் என்பதற்காகக் கொண்டு வந்துள்ளேன்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள், அச்சமயம் அது அவர்களுக்குத் தேவையாகவும் இருந்தது. எனவே, நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது கீழாடையாக அணிந்துகொண்டு வெளியே வந்தார்கள். ஒரு மனிதர் அதைப் புகழ்ந்து, "இதை எனக்குத் தருவீர்களா? இது எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்று கூறினார். மற்ற மக்கள், "நீர் செய்தது சரியல்ல. நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப்படும்போது, நீர் அதைக் கேட்டிருக்கிறீர். அவர்கள் யாரேனும் எதையேனும் கேட்டால் அதை ஒருபோதும் மறுக்கமாட்டார்கள் என்பது உமக்குத் தெரிந்திருந்தும் (நீர் இப்படிக் கேட்டுவிட்டீரே!)" என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் இதை அணிவதற்காகக் கேட்கவில்லை; மாறாக, இதை என் கஃபன் துணியாக்கிக் கொள்வதற்காகவே கேட்டேன்" என்று பதிலளித்தார். பிற்காலத்தில் அது அவரின் கஃபன் துணியாக ஆனது.