இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

31ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ حَدَّثَنِي أَبُو كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ كُنَّا قُعُودًا حَوْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَعَنَا أَبُو بَكْرٍ وَعُمَرُ فِي نَفَرٍ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ بَيْنِ أَظْهُرِنَا فَأَبْطَأَ عَلَيْنَا وَخَشِينَا أَنْ يُقْتَطَعَ دُونَنَا وَفَزِعْنَا فَقُمْنَا فَكُنْتُ أَوَّلَ مَنْ فَزِعَ فَخَرَجْتُ أَبْتَغِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَتَيْتُ حَائِطًا لِلأَنْصَارِ لِبَنِي النَّجَّارِ فَدُرْتُ بِهِ هَلْ أَجِدُ لَهُ بَابًا فَلَمْ أَجِدْ فَإِذَا رَبِيعٌ يَدْخُلُ فِي جَوْفِ حَائِطٍ مِنْ بِئْرٍ خَارِجَةٍ - وَالرَّبِيعُ الْجَدْوَلُ - فَاحْتَفَزْتُ كَمَا يَحْتَفِزُ الثَّعْلَبُ فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ أَبُو هُرَيْرَةَ ‏"‏ ‏.‏ فَقُلْتُ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ مَا شَأْنُكَ ‏"‏ ‏.‏ قُلْتُ كُنْتَ بَيْنَ أَظْهُرِنَا فَقُمْتَ فَأَبْطَأْتَ عَلَيْنَا فَخَشِينَا أَنْ تُقْتَطَعَ دُونَنَا فَفَزِعْنَا فَكُنْتُ أَوَّلَ مَنْ فَزِعَ فَأَتَيْتُ هَذَا الْحَائِطَ فَاحْتَفَزْتُ كَمَا يَحْتَفِزُ الثَّعْلَبُ وَهَؤُلاَءِ النَّاسُ وَرَائِي فَقَالَ ‏"‏ يَا أَبَا هُرَيْرَةَ ‏"‏ ‏.‏ وَأَعْطَانِي نَعْلَيْهِ قَالَ ‏"‏ اذْهَبْ بِنَعْلَىَّ هَاتَيْنِ فَمَنْ لَقِيتَ مِنْ وَرَاءِ هَذَا الْحَائِطِ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ فَبَشِّرْهُ بِالْجَنَّةِ ‏"‏ فَكَانَ أَوَّلَ مَنْ لَقِيتُ عُمَرُ فَقَالَ مَا هَاتَانِ النَّعْلاَنِ يَا أَبَا هُرَيْرَةَ ‏.‏ فَقُلْتُ هَاتَانِ نَعْلاَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَنِي بِهِمَا مَنْ لَقِيتُ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ بَشَّرْتُهُ بِالْجَنَّةِ ‏.‏ فَضَرَبَ عُمَرُ بِيَدِهِ بَيْنَ ثَدْيَىَّ فَخَرَرْتُ لاِسْتِي فَقَالَ ارْجِعْ يَا أَبَا هُرَيْرَةَ فَرَجَعْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَجْهَشْتُ بُكَاءً وَرَكِبَنِي عُمَرُ فَإِذَا هُوَ عَلَى أَثَرِي فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَا لَكَ يَا أَبَا هُرَيْرَةَ ‏"‏ ‏.‏ قُلْتُ لَقِيتُ عُمَرَ فَأَخْبَرْتُهُ بِالَّذِي بَعَثْتَنِي بِهِ فَضَرَبَ بَيْنَ ثَدْيَىَّ ضَرْبَةً خَرَرْتُ لاِسْتِي قَالَ ارْجِعْ ‏.‏ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ يَا عُمَرُ مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ ‏"‏ ‏.‏ قَالَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي أَبَعَثْتَ أَبَا هُرَيْرَةَ بِنَعْلَيْكَ مَنْ لَقِيَ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ بَشَّرَهُ بِالْجَنَّةِ ‏.‏ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ ‏.‏ قَالَ فَلاَ تَفْعَلْ فَإِنِّي أَخْشَى أَنْ يَتَّكِلَ النَّاسُ عَلَيْهَا فَخَلِّهِمْ يَعْمَلُونَ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَخَلِّهِمْ ‏"‏ ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் (எங்களுடன்) ஒரு குழுவில் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கிடையிலிருந்து எழுந்து சென்றார்கள். அவர்கள் எங்களிடம் திரும்பி வரத் தாமதமானார்கள். நாங்கள் (அவர்களுடன் இல்லாத நேரத்தில்) அவர்கள் (எதிரிகளால்) தனிமைப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டு விடுவார்களோ என்று அஞ்சித் திடுக்கிட்டோம். எனவே நாங்கள் (பதற்றத்துடன்) எழுந்தோம்.

அவ்வாறு திடுக்கிட்டவர்களில் நானே முதலாமவன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடி வெளியே சென்று, அன்சாரிகளில் பனூ நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்தேன். அத்தோட்டத்திற்கு வாசல் ஏதும் இருக்கிறதா என்று அதைச் சுற்றி வந்தேன்; ஆனால், வாசலைக் காணவில்லை. (வெளியேயுள்ள) ஒரு கிணற்றிலிருந்து அத்தோட்டத்திற்குள் நீர் செல்லும் வாய்க்கால் ஒன்றைக் கண்டேன். (அது ஒரு சிறிய நீரோடை.) உடனே ஒரு நரியைப் போல (என் உடலைச்) சுருக்கிக்கொண்டு, (அதன் வழியாகத்) தோட்டத்தில் நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அவர்கள், "அபூஹுரைராவா?" என்று கேட்டார்கள். நான், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அவர்கள் "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். நான், "எங்களுக்கிடையிலிருந்து நீங்கள் எழுந்து சென்றீர்கள்; எங்களிடம் திரும்பத் தாமதமானீர்கள்; ஆகவே, நாங்கள் (உங்களுடன் இல்லாத நேரத்தில்) நீங்கள் தாக்கப்பட்டு விடுவீர்களோ என்று அஞ்சி நாங்கள் திடுக்கிட்டோம்; அவ்வாறு திடுக்கிட்டவர்களில் நானே முதலாமவன். எனவே, நான் இந்தத் தோட்டத்திற்கு வந்து, நரி (நுழைவது) போன்று (உடலைச்) சுருக்கிக்கொண்டு நுழைந்தேன். இதோ மற்ற மனிதர்கள் எனக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னேன்.

உடனே அவர்கள் தமது காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, "அபூஹுரைரா! எனது இவ்விரு காலணிகளையும் எடுத்துக்கொண்டு செல்; இந்தத் தோட்டத்திற்கு அப்பால், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று உளப்பூர்வமாக நம்பிச் சாட்சி சொல்பவரை நீ சந்தித்தால், அவருக்குச் சொர்க்கம் உண்டு என நற்செய்தி சொல்" என்று கூறினார்கள்.

நான் சந்தித்த முதல் நபர் உமர் (ரலி) ஆவார். அவர், "அபூஹுரைரா! இவ்விரு காலணிகள் என்ன?" என்று கேட்டார். நான், "இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று உளப்பூர்வமாக நம்பிச் சாட்சி பகர்பவரைச் சந்தித்தால், அவருக்குச் சொர்க்கம் உண்டு என்று நற்செய்தி சொல்வதற்காக இவற்றை என்னிடம் கொடுத்து அனுப்பினார்கள்" என்று சொன்னேன்.

உடனே உமர் (ரலி) எனது நெஞ்சின் மீது தமது கையால் ஓங்கி அடித்தார். அதனால் நான் பின்புறமாக விழுந்தேன். அவர், "அபூஹுரைரா! திரும்பிச் செல்" என்று கூறினார். உடனே நான் (தேம்பி) அழுதவாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். உமர் (ரலி) என்னைத் தொடர்ந்து என் பின்னாலேயே வந்துவிட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அபூஹுரைரா! உனக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். நான், "வழியில் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தேன்; தாங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய செய்தியை அவரிடம் தெரிவித்தேன்; அவர் எனது நெஞ்சின் மீது ஓங்கி அடித்தார்; அதனால் நான் பின்புறமாக விழுந்துவிட்டேன்; என்னைத் திரும்பிப் போகும்படி கூறிவிட்டார்" என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?" என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று உளப்பூர்வமாக நம்பிச் சாட்சி பகர்பவரைச் சந்தித்தால், அவருக்குச் சொர்க்கம் உண்டு என்று நற்செய்தி சொல்வதற்காக அபூஹுரைராவிடம் உங்கள் காலணிகளைக் கொடுத்து அனுப்பினீர்களா?" என்று கேட்டார். அவர்கள் "ஆம்" என்றார்கள்.

அதற்கு உமர் (ரலி), "அவ்வாறு செய்யாதீர்கள் (அல்லாஹ்வின் தூதரே!); ஏனெனில், மக்கள் இதையே நம்பி (நற்செயல்கள் செய்வதைக் கை)விட்டு விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்; ஆகவே, அவர்களை (நற்செயல்கள்) செய்ய விடுங்கள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், அவர்களை விட்டுவிடுவீராக!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح