حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى " أَتَدْرُونَ أَىُّ يَوْمٍ هَذَا ". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. فَقَالَ " فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَىُّ بَلَدٍ هَذَا ". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ " بَلَدٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَىُّ شَهْرٍ هَذَا ". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ " شَهْرٌ حَرَامٌ ـ قَالَ ـ فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا ". وَقَالَ هِشَامُ بْنُ الْغَازِ أَخْبَرَنِي نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ وَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ بَيْنَ الْجَمَرَاتِ فِي الْحَجَّةِ الَّتِي حَجَّ بِهَذَا، وَقَالَ " هَذَا يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ "، فَطَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ اشْهَدْ ". وَوَدَّعَ النَّاسَ. فَقَالُوا هَذِهِ حَجَّةُ الْوَدَاعِ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மினாவில் நபி (ஸல்) அவர்கள், "இது என்ன நாள் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கறிவார்கள்" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "இது ஒரு புனிதமான நாள். இது என்ன நகரம் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கறிவார்கள்" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "இது ஒரு புனிதமான நகரம். இது என்ன மாதம் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கறிவார்கள்" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "இது ஒரு புனிதமான மாதம்" என்று கூறிவிட்டு, "நிச்சயமாக அல்லாஹ், உங்களின் இரத்தங்களையும், உங்களின் செல்வங்களையும், உங்களின் மானங்களையும் (பிறருக்குத் தீண்டத்தகாதவையாகவும், அத்துமீறக்கூடாதவையாகவும்) ஆக்கியுள்ளான். (அவை) உங்களின் இந்த நாளின் புனிதத்தைப் போன்றும், உங்களின் இந்த மாதத்தின் புனிதத்தைப் போன்றும், உங்களின் இந்த நகரத்தின் புனிதத்தைப் போன்றும் (பாதுகாக்கப்பட வேண்டியவை)" என்று கூறினார்கள்.
மேலும் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ் செய்தபோது, நஹ்ருடைய நாளில் (துல்ஹஜ் 10ஆம் நாள்) ஜம்ராக்களுக்கு இடையே நின்றுகொண்டு, "இது 'ஹஜ்ஜுல் அக்பர்' (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளாகும்" என்று கூறினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம இஷ்ஹத்" (யா அல்லாஹ்! நீ சாட்சியாக இரு!) என்று கூறலானார்கள். பிறகு மக்களிடமிருந்து விடைபெற்றார்கள். ஆகவே மக்கள், "இது ஹஜ்ஜத்துல் வதா (விடைபெறும் ஹஜ்)" என்று கூறினார்கள்.