முஃகீரா பின் ஷுஅபா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு நாள் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் எனது வாகனத்தின் கழுத்தில் தட்டி, "உன்னிடம் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான், "ஆம், என்னிடம் இந்தத் தண்ணீர் பை உள்ளது" என்றேன். அவர்கள் கீழே இறங்கி, இயற்கை உபாதையை நிறைவேற்றினார்கள். பின்னர் என்னிடம் வந்து, "உனக்கும் இயற்கை உபாதையை நிறைவேற்றும் தேவை இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன்.
பின்னர் அவர்கள் தமது இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். மூன்று முறை வாய் கொப்பளித்தார்கள். மூன்று முறை நாசிக்கு நீர் செலுத்திச் சுத்தம் செய்தார்கள். தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இரு முழங்கைகளையும் (சட்டையிலிருந்து) வெளியே எடுக்க நாடினார்கள். அவர்கள் அணிந்திருந்த கம்பளிச் சட்டை இறுக்கமாக இருந்ததால், அதிலிருந்து முழங்கைகளை வெளியே எடுக்க முடியவில்லை. எனவே, சட்டையின் கீழ்ப்பகுதியிலிருந்து தமது கைகளை வெளியே எடுத்து, இரு முழங்கைகளையும் மும்மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது தலையை மஸஹ் செய்தார்கள். மேலும், (தாம் அணிந்திருந்த) இரு காலுறைகள் (குஃப்) மீதும் மஸஹ் செய்தார்கள்.
பின்னர் நாங்கள் புறப்பட்டுச் சென்று மக்களை அடைந்தோம். அங்கு அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) மக்களுக்குத் தொழுகை நடத்திக்கொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்திருப்பதை அவருக்குத் தெரிவிக்க நாடினேன். ஆனால், (அவ்வாறு செய்ய வேண்டாம் என) நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்தார்கள். நாங்கள் (அவருடன் சேர்ந்து ஒரு ரக்அத்) தொழுதோம். பின்னர் (விடுபட்ட) இரண்டாவது ரக்அத்தை (எழுந்து) நிறைவு செய்தோம்.