அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பாரசீகத்தைச் சேர்ந்த அண்டைவீட்டுக்காரர் ஒருவர் இருந்தார். அவர் மிகச் சுவையாகக் கறிக்குழம்பு (தயாரிப்பவராக) இருந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (உணவு) தயாரித்துவிட்டு, அவர்களை (விருந்துக்கு) அழைப்பதற்காக வந்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரழி) அவர்களைச் சுட்டிக்காட்டி), "இவருக்கும் (அழைப்பு உண்டா)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "இல்லை" என்றார். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அப்படியானால்) இல்லை (நானும் வரவில்லை)" என்று கூறிவிட்டார்கள்.
பின்னர் அவர் மீண்டும் (வந்து) அவர்களை அழைக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவருக்கும் (உண்டா)?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அப்படியானால்) இல்லை" என்று கூறிவிட்டார்கள்.
பின்னர் மூன்றாவது முறையாக அவர் (வந்து) அவர்களை அழைத்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவருக்கும் (உண்டா)?" என்று கேட்டார்கள். அந்த மூன்றாவது முறை அவர் "ஆம்" என்று பதிலளித்தார். அதன் பின்னர், அவர்கள் இருவரும் (நபியவர்களும் ஆயிஷா (ரழி) அவர்களும்) எழுந்து, ஒருவரையொருவர் (நெருக்கமாகத்) தொடர்ந்தவாறு நடந்து அவருடைய வீட்டைச் சென்றடைந்தார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)