حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ فَاطِمَةُ ابْنَةُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلاَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي ". قَالَ وَقَالَ أَبِي " ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الْوَقْتُ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உதிரப்போக்குத் தொடர்கிறது; நான் தூய்மையடைவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; அது ஒரு நரம்பிலிருந்து வருவதாகும்; மாதவிடாய் அல்ல. ஆகவே, உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு. அது சென்றுவிட்டால் உன்னிடமிருந்து இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுதுகொள்" என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்) ஹிஷாம் கூறினார்: என் தந்தை (உர்வா) கூறினார்: "பிறகு (மாதவிடாய் காலம்) வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூ செய்துகொள்."
ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்களுக்கு 'இஸ்திஹாதா' (தொடர் இரத்தப்போக்கு) ஏற்பட்டது. எனவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தொடர் இரத்தப்போக்கு ஏற்படுகிறது; நான் தூய்மையடைவதே இல்லை. எனவே, நான் தொழுகையை விட்டுவிடலாமா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (மாதவிடாய் அல்ல;) ஒரு இரத்த நாளத்(தின் வெடிப்பினால் ஏற்படுவதாகும்). எனவே, மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடுங்கள். அது முடிந்துவிட்டதும் உங்களை விட்டும் இரத்தத்தின் சுவட்டைக் கழுவிவிட்டு, உளூ செய்துகொள்ளுங்கள். ஏனெனில், அது ஒரு இரத்த நாளத்(தின் வெடிப்பினால் ஏற்படுவதாகும்); அது மாதவிடாய் அல்ல" என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர் ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடம்) "அப்படியானால் குளிப்பது (பற்றி ஹதீஸில் இடம்பெறவில்லையா)?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அதில் (மாதவிடாய் முடிந்ததும் குளிக்க வேண்டும் என்பதில்) எவருக்கும் எவ்விதச் சந்தேகமும் இல்லை" என்று பதிலளித்தார்.
அபூஅப்துர்ரஹ்மான் (இமாம் நஸாயீ) அவர்கள் கூறுகிறார்கள்: "இந்த ஹதீஸில் 'உளூ செய்துகொள்ளுங்கள்' என்ற வார்த்தையை ஹம்மாத் பின் ஸைத் அவர்களைத் தவிர வேறு எவரும் குறிப்பிட்டதாக நான் அறியவில்லை. ஹிஷாம் அவர்களிடமிருந்து பலரும் இதனை அறிவித்துள்ளனர்; ஆனால், எவரும் அதில் 'உளூ செய்துகொள்ளுங்கள்' என்று குறிப்பிடவில்லை."