அபூஸலமா அவர்களின் புதல்வி ஸைனப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! பால்குடிப் பருவத்தைத் தாண்டிய (அந்நியச்) சிறுவன் என்னைப் பார்ப்பதை என் மனம் ஏற்கவில்லை" என்று கூறியதை நான் கேட்டேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "ஏன் (ஏற்கவில்லை)? ஸுஹைலின் புதல்வி ஸஹ்லா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! ஸாலிம் (எங்கள் வீட்டிற்குள்) வருவதால் (என் கணவர்) அபூஹுதைஃபாவின் முகத்தில் (ஓர் அதிருப்தியை) நான் காண்கிறேன்' என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அவருக்கு நீ பாலூட்டு' என்று கூறினார்கள். அதற்கு ஸஹ்லா (ரலி) அவர்கள், 'அவருக்குத் தாடி இருக்கிறதே! (அவர் பெரியவராயிற்றே)' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அவருக்கு நீ பாலூட்டு; அபூஹுதைஃபாவின் முகத்தில் உள்ள (அதிருப்தி) நீங்கிவிடும்' என்று கூறினார்கள். (அவ்வாறே ஸஹ்லா பாலூட்டினார்.) 'அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு அபூஹுதைஃபாவின் முகத்தில் (அந்த அதிருப்தியை) நான் காணவில்லை' என்று ஸஹ்லா (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள்.