ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறி தொழுகையையும், 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்பதைக் கொண்டு கிராஅத்தையும் துவக்குபவர்களாக இருந்தார்கள். அவர்கள் ருகூஃ செய்யும்போது, தமது தலையை (அதிகமாக) உயர்த்தவும் மாட்டார்கள், (அதிகமாக) தாழ்த்தவும் மாட்டார்கள்; மாறாக அவ்விரண்டிற்கும் இடையில் வைத்திருப்பார்கள். ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தினால், நேராக நிற்கும் வரை ஸஜ்தாச் செய்ய மாட்டார்கள். ஸஜ்தாவிலிருந்து தமது தலையை உயர்த்தினால், (நன்கு) அமரும் வரை (அடுத்த) ஸஜ்தாச் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத்களிலும் 'அத்தஹிய்யாத்' ஓதுவார்கள். மேலும் அவர்கள் அமரும்போது, தமது இடது காலை விரித்து, வலது காலை நட்டு வைப்பார்கள். ஷைத்தான் அமர்வது போன்று (குதிகால்கள் மீது அமர்வதையும்), காட்டு விலங்குகள் (தமது முன்கைகளை) விரிப்பதைப் போன்று (ஸஜ்தாவில்) விரிப்பதையும் அவர்கள் தடை செய்தார்கள். அவர்கள் ஸலாம் கூறுவதன் மூலம் தொழுகையை முடிப்பார்கள்.