நபி (ஸல்) அவர்கள் கஃபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது நான் அவர்களிடம் வந்தேன். நான் வருவதைக் கண்டதும் அவர்கள், "கஃபாவின் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தாம் நஷ்டவாளிகள்!" என்று கூறினார்கள். நான், "எனக்கு என்ன நேர்ந்தது? என்னைப் பற்றி ஏதேனும் (இறைச்செய்தி) அருளப்பட்டுள்ளதா?" என்று கேட்டேன். (பிறகு) நான், "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அவர்கள் யார்?" என்று கேட்டேன்.
அவர்கள் கூறினார்கள்: "அதிக செல்வம் உடையவர்கள்; ஆனால், இப்படி, இப்படி, இப்படி (தர்மம் செய்பவரைத்) தவிர," என்று தங்களுக்கு முன்னாலும், வலதுபுறமும், இடதுபுறமும் (சைகை) செய்தார்கள்.
பிறகு அவர்கள் கூறினார்கள்: "என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒரு மனிதர் தாம் ஜகாத் கொடுக்காத ஒட்டகங்களையோ அல்லது மாடுகளையோ விட்டுவிட்டு இறந்தால், மறுமை நாளில் அவை இருந்ததை விட மிகப் பெரியதாகவும் கொழுத்ததாகவும் வந்து, அவரைத் தங்கள் குளம்புகளால் மிதித்து, தங்கள் கொம்புகளால் குத்தும். அவற்றில் கடைசி விலங்கு (கடந்து) சென்றதும், முதல் விலங்கு மீண்டும் வந்துவிடும். மக்களிடையே தீர்ப்பு வழங்கப்படும் வரை (இந்நிலை தொடரும்)."
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் கஃபாவின் நிழலில் அமர்ந்திருந்தார்கள். நான் வருவதைக் கண்ட அவர்கள், 'கஃபாவின் இறைவன் மீது ஆணையாக! மறுமை நாளில் அவர்களே மிகப்பெரும் நஷ்டவாளிகள்' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நான், 'எனக்கு என்ன நேர்ந்தது? ஒருவேளை என்னைப் பற்றி (ஏதேனும் கண்டன இறைச்செய்தி) அருளப்பட்டுள்ளதா?' என்று (எனக்குள்) கேட்டுக்கொண்டேன். பிறகு நான், '(அல்லாஹ்வின் தூதரே!) அவர்கள் யார்? என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்' என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அவர்கள் அதிகம் செல்வம் உடையவர்கள்தான். ஆனால், (தமது செல்வத்தை) இப்படியும், இப்படியும், இப்படியும் என்று கூறி...' - (இதை விவரிக்கும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது முன்னாலும், தமது வலது புறத்திலும், தமது இடது புறத்திலும் (வாரி வழங்குவதை) சைகை செய்தார்கள் - '...என (செலவு) செய்பவர்களைத் தவிர.'
பிறகு அவர்கள் கூறினார்கள்: 'என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! ஒட்டகத்தையோ அல்லது மாட்டையோ விட்டுச் செல்கிற ஒரு மனிதர், அதற்கான ஜகாத்தை நிறைவேற்றாமல் இறந்துவிட்டால், மறுமை நாளில் அவை இருந்ததை விடப் பெரிதாகவும், கொழுத்ததாகவும் வந்து, அவரைத் தங்கள் கால்களால் மிதிக்கும்; தங்கள் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி (அவரைக் கடந்து) சென்றதும், முதல் பிராணி மீண்டும் அவரிடம் வரும். மக்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்படும் வரை (இந்நிலை தொடரும்).'