இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்கர் (ரழி) அவர்களின் காலத்திலும், உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளிலும் (ஒரே நேரத்தில் கூறப்படும்) மூன்று தலாக் ஒரு தலாக்காகவே கருதப்பட்டது. இந்நிலையில் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள், 'மக்கள் தங்களுக்கு நிதானம் அளிக்கப்பட்டிருந்த ஒரு விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டார்கள். எனவே, இதை நாம் அவர்கள் மீது அமல்படுத்தினால் (நன்றாக இருக்கும்)' என்று கூறினார்கள். அவ்வாறே அதை அவர்கள் மீது அமல்படுத்தினார்கள்."
அபுஸ்ஸஹ்பா, இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரழி) அவர்களின் காலத்திலும், உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் மூன்று ஆண்டுகளிலும் மும்முறை தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி), "ஆம்" என்று பதிலளித்தார்கள்.