நாங்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரழி) அவர்களிடம் சென்றோம். அவர்கள் எங்களுக்கு ‘இப்னு தாப்’ எனப்படும் பழுத்தப் பேரீச்சம் பழங்களை(த் தந்து) உபசரித்தார்கள். மேலும், ‘சுல்த்’ (வகையான வாற்கோதுமையால் செய்யப்பட்ட) மாவுக் கூழைப் பருகத் தந்தார்கள். நான் அவர்களிடம், மூன்று தலாக் விடப்பட்ட பெண் எங்கே ‘இத்தா’ இருக்க வேண்டும்? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: "என் கணவர் எனக்கு மூன்று தலாக் கூறிவிட்டார். நான் என் குடும்பத்தாரிடம் ‘இத்தா’ இருக்குமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள்."
மேலும் அவர்கள் கூறினார்கள்: "(பிறகு) மக்களிடையே 'அஸ்ஸலாத்து ஜாமிஆ' (தொழுகை கூடுகிறது) என்று அறிவிக்கப்பட்டது. நானும் மக்களுடன் (பள்ளிக்குச்) சென்றேன். பெண்களின் முதல் வரிசையில் நான் இருந்தேன். அது ஆண்களின் கடைசி வரிசையை அடுத்து இருந்தது. நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது உரை நிகழ்த்தக் கேட்டேன். அப்போது அவர்கள், 'தமீமுத் தாரீயின் சிறிய தந்தை மக்கள் (சிலர்) கடலில் பயணம் மேற்கொண்டனர்...' என்று கூறினார்கள்."
(அறிவிப்பாளர்) இந்த ஹதீஸை (முழுமையாக) அறிவித்தார். அதில் பின்வருமாறு அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:
(ஃபாத்திமா (ரழி) கூறினார்கள்:) "நபி (ஸல்) அவர்கள் தமது கைத்தடியால் பூமியை நோக்கிச் சைகை செய்து, 'இதுதான் த்தைய்பா' - அதாவது மதீனா - என்று கூறியதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது."