ராஃபிஉ பின் கதீஜ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அன்சாரிகளிலேயே அதிக வயல்கள் உடையவர்களாக நாங்கள் இருந்தோம். நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது வழக்கம். சில வேளைகளில் (நிலத்தின்) இப்பகுதி விளைச்சலைத் தரும்; அப்பகுதி விளைச்சலைத் தராது. எனவே, அவ்வாறு (நிலத்தின் குறிப்பிட்ட பகுதியின் விளைச்சலை குத்தகைக்குக் கொடுப்பதிலிருந்து) செய்வதிலிருந்து நாங்கள் தடுக்கப்பட்டோம். ஆனால், வெள்ளி (நாணயத்தி)ற்காகக் குத்தகைக்கு விட நாங்கள் தடுக்கப்படவில்லை.
ஹன்ஃழலா பின் கைஸ் கூறினார்:
“நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘நாங்கள், (நிலத்தின்) இப்பகுதியில் விளைவது உனக்கு; இப்பகுதியில் விளைவது எனக்கு என்ற அடிப்படையில் நிலத்தைக் குத்தகைக்கு விடுபவர்களாக இருந்தோம். எனவே, (நிலத்தின் குறிப்பிட்ட) பகுதிகளில் விளைவதைக் கொண்டு (அதை ஒருவருக்கொருவர் பிரித்துக்கொள்ளும் வகையில்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்கு நாங்கள் தடை செய்யப்பட்டோம். ஆனால், வெள்ளிக்காக (அதாவது, பணத்திற்காக) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்கு நாங்கள் தடை செய்யப்படவில்லை.’”