அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் (சட்டபூர்வமான ஆட்சியாளருக்குக்) கீழ்ப்படிவதிலிருந்து வெளியேறி, (முஸ்லிம்) கூட்டமைப்பிலிருந்து பிரிந்து விடுகிறாரோ, பின்னர் (அந்த நிலையிலேயே) மரணமடைகிறாரோ அவர் ஜாஹிலிய்யத் எனும் அறியாமைக்கால மரணத்தையே அடைவார். யார் குறிக்கோளற்ற (குருட்டுத்தனமான) கொடியின் கீழ், இனவெறிக்காகக் கோபப்பட்டு, இனவெறிக்காகவே போரிட்டுக் கொல்லப்படுகிறாரோ அவர் எனது உம்மத்தைச் சார்ந்தவர் அல்லர். மேலும், யார் எனது உம்மத்திற்கு எதிராகப் புறப்பட்டு, அவர்களில் நல்லவர்களையும் தீயவர்களையும் தாக்கி, அவர்களில் இறைநம்பிக்கை கொண்டவர்களையும் விட்டுவைக்காமல், ஒப்பந்தம் செய்யப்பட்டவர்களுக்கு (அளித்த) வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் இருக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் (தலைமைக்குக்) கட்டுப்படுவதிலிருந்து வெளியேறி, ஜமாஅத்திலிருந்து (முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையிலிருந்து) பிரிந்து மரணிக்கிறாரோ, அவர் ஜாஹிலிய்யா (அறியாமைக்கால) மரணத்தை அடைந்துவிட்டார். யார் என் உம்மத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, அவர்களில் நல்லவர், தீயவர் (என்ற பாகுபாடின்றி அனைவரையும்) தாக்கி, இறைநம்பிக்கையாளர்களைக் (கொல்வதைத்) தவிர்க்காமலும், ஒப்பந்தம் செய்தவர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாமலும் இருக்கிறாரோ, அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர். யார் தெளிவற்ற ஒரு கொடியின் கீழ் போரிட்டு, குலப்பெருமைக்காக (மக்களை) அழைத்து, அல்லது குலப்பெருமைக்காகக் கோபம் கொண்டு, (அந்த நிலையில்) கொல்லப்படுகிறாரோ, அது ஜாஹிலிய்யா (காலக்) கொலையாகும்."