ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவின்) மேட்டுப்பாங்கான பகுதியிலிருந்து சந்தைக்குள் நுழைந்து சென்றார்கள். மக்களும் அவர்களுக்கு இருபுறமும் இருந்தனர். அப்போது அவர்கள் சிறிய காதுகளுடைய ஓர் ஆட்டுக்குட்டியைக் கடந்து சென்றார்கள். அதன் காதைப் பிடித்து, "இதை ஒரு திர்ஹத்திற்கு வாங்க உங்களில் யார் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "இதை எதற்கும் (வாங்க) நாங்கள் விரும்பவில்லை; இதை வைத்து நாங்கள் என்ன செய்வது?" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "இது உங்களுக்கு(ச் சொந்தமாக) இருப்பதை விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அவர்கள், "இல்லை" என்றனர். நபி (ஸல்) அவர்கள் மும்முறை அவ்வாறு கூறினார்கள்.
அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது உயிருடன் இருந்தால்கூட, இது சிறிய காதுடையதாக இருப்பது இதில் ஒரு குறையாகும். அப்படியிருக்க, இது செத்ததாக இருக்கும்போது எப்படி (விரும்புவோம்)?" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த ஆடு உங்களுக்கு எவ்வளவு அற்பமானதோ, அதைவிட அல்லாஹ்விடம் இவ்வுலகம் மிகவும் அற்பமானதாகும்" என்று கூறினார்கள்.