அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
எங்களில் ஒருவர் உறங்க நாடினால் தமது வலது புறமாகப் படுத்துக் கொண்டு (பின்வருமாறு) கூறும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள்:
(பொருள்: "அல்லாஹ்வே! வானங்களின் இறைவனே! பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் இறைவனே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளின் இறைவனே! தானியங்களையும் பேரீச்சங்கொட்டைகளையும் பிளப்பவனே! தவ்ராத், இன்ஜீல் மற்றும் ஃபுர்கானை (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் திருக்குர்ஆனை) அருளியவனே! யாருடைய நெற்றி உரோமங்கள் உன் பிடியில் இருக்கின்றனவோ அந்த ஒவ்வொரு பொருளின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! நீயே முதலாமவன்; உனக்கு முன் எதுவும் இல்லை. நீயே இறுதியானவன்; உனக்குப் பின் எதுவும் இல்லை. நீயே பகிரங்கமானவன் (மேலானவன்); உனக்கு மேலே எதுவும் இல்லை. நீயே அந்தரங்கமானவன்; உனக்கு அப்பால் எதுவும் இல்லை (உனக்கு மறைவானது எதுவும் இல்லை). எங்களைவிட்டுக் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையிலிருந்து எங்களை விடுவிப்பாயாக!")
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பணியாளரைக் கேட்டார்கள் (அவர்களின் வீட்டு வேலைகளுக்கு உதவியாக). அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "கூறுங்கள்: 'அல்லாஹும்ம ரப்பஸ் ஸமாவாத்திஸ் ஸப்இ' (ஏழு வானங்களின் அதிபதியே அல்லாஹ்வே!)" என்று கூறினார்கள். சுஹைல் அவர்கள் தம் தந்தை வழியாக அறிவித்த ஹதீஸைப் போன்றே (இதுவும்) உள்ளது.