நான் அப்துல்லாஹ் (பின் மஸ்வூத்) (ரழி) அவர்கள் நோயுற்றிருந்தபோது அவர்களை நலம் விசாரிக்கச் சென்றேன். அப்போது அவர்கள் இரண்டு செய்திகளை எங்களுக்கு அறிவித்தார்கள். ஒன்று அவர்களைப் பற்றியது; மற்றொன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றியது. அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்:
"வெறிச்சோடிய, ஆபத்தான ஒரு நிலத்தில் ஒரு மனிதர் தனது சவாரிப் பிராணியுடன் இருக்கிறார். அதில் அவருடைய உணவும் பானமும் உள்ளன. அவர் (சிறிது நேரம்) உறங்கி விழித்தபோது, அது (சவாரிப் பிராணி) சென்றுவிட்டிருந்தது. அவர் அதைத் தேடினார்; தாகம் அவரை மிகைத்தது. பிறகு அவர், 'நான் முன்பு இருந்த இடத்துக்கே திரும்பிச் சென்று, மரணிக்கும் வரை உறங்குவேன்' என்று கூறி, இறந்துவிடுவதற்காகத் தன் முன்னங்கையின் மீது தலையை வைத்துப் படுத்தார். அவர் விழித்தபோது, அவரிடம் அவருடைய சவாரிப் பிராணியும் அதன் மீது அவரின் பயண உணவும், பானமும் இருக்கின்றன. (நம்பிக்கையிழந்து மரணத்தை எதிர்பார்த்திருந்த நிலையில்) இந்த மனிதர் தனது சவாரிப் பிராணியையும் பயண உணவையும் (மீண்டும்) பெற்றதால் அடையும் மகிழ்ச்சியைவிட, முஃமினான அடியார் செய்யும் தவ்பாவினால் (பாவமன்னிப்பினால்) அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சியடைகிறான்."