நும்ஆன் பின் பஷீர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஹுதைஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் நாடும் காலம் வரை உங்களுக்கு மத்தியில் நுபுவ்வத் (நபித்துவம்) இருக்கும். பின்னர் அதனை உயர்த்திக்கொள்ள (முடித்துக்கொள்ள) அல்லாஹ் நாடும்போது அதனை அவன் உயர்த்திக் கொள்வான். பின்னர் நபித்துவத்தின் வழிமுறையிலான (நேர்வழி நின்ற கலீபாக்களின்) கிலாஃபத் அமையும். அது அல்லாஹ் நாடும் காலம் வரை நீடிக்கும். பின்னர் அதனை உயர்த்திக்கொள்ள அல்லாஹ் நாடும்போது அதனையும் அவன் உயர்த்திக் கொள்வான். பின்னர் கவ்விப் பிடிக்கும் (வாரிசுரிமை அடிப்படையிலான) மன்னராட்சி ஏற்படும். அதுவும் அல்லாஹ் நாடும் காலம் வரை நீடிக்கும். பின்னர் அதனை உயர்த்திக்கொள்ள அல்லாஹ் நாடும்போது அதனையும் அவன் உயர்த்திக் கொள்வான். பின்னர் அடக்குமுறை (சர்வாதிகார) மன்னராட்சி ஏற்படும். அதுவும் அல்லாஹ் நாடும் காலம் வரை நீடிக்கும். பின்னர் அதனை உயர்த்திக்கொள்ள அல்லாஹ் நாடும்போது அதனையும் அவன் உயர்த்திக் கொள்வான். அதன் பிறகு (மீண்டும்) நபித்துவத்தின் வழிமுறையிலான கிலாஃபத் அமையும்."
இவ்வாறு கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள்.
(இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹபீப் கூறுகிறார்: உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் (ஆட்சிப்) பொறுப்பை ஏற்றபோது, அவருக்கு இந்த ஹதீஸை நினைவூட்டும் விதமாக நான் கடிதம் எழுதினேன். அதில், "கவ்விப் பிடிக்கும் மன்னராட்சி மற்றும் அடக்குமுறை மன்னராட்சிக்குப் பின் வந்த அமீருல் முஃமினீனாக (இறைநம்பிக்கையாளர்களின் தலைவராக) நீங்கள் இருப்பீர்கள் என நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தேன். இக்கடிதத்தைக் கண்டு உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் (அதாவது அவர் அந்த நற்செய்தியை ஏற்றுக்கொண்டார்).