அபூ நஜீஹ் அம்ர் பின் அபஸா அஸ்-ஸுலமீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் அறியாமைக் காலத்தில் இருந்தபோது, மக்கள் வழிகேட்டில் இருப்பதாகவும், அவர்கள் எதிலுமே (சத்தியத்தில்) இல்லை என்றும், அவர்கள் சிலைகளை வணங்குகிறார்கள் என்றும் கருதிக்கொண்டிருந்தேன். பின்னர் மக்காவில் ஒரு மனிதர் செய்திகளை (வஹியை) அறிவிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். உடனே நான் எனது வாகனத்தில் அமர்ந்து அவரிடம் (மக்காவிற்கு) வந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறைந்து வாழ்வதைக் கண்டேன். அவருடைய சமுதாயத்தினர் அவருக்கு எதிராகத் துணிந்து செயல்பட்டுக் கொண்டிருந்தனர். நான் (மக்காவிற்குள்) பக்குவமாக நுழைந்து அவர்களிடம் சென்றேன்.
நான் அவரிடம், "நீங்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "நான் ஒரு இறைத்தூதர் (நபி)" என்றார்கள். "நபி என்றால் என்ன?" என்று நான் கேட்டேன். அதற்கு, "அல்லாஹ் என்னை அனுப்பியுள்ளான்" என்று கூறினார்கள். "எதைக் கொடுத்து உங்களை அனுப்பியுள்ளான்?" என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "உறவுகளைப் பேணி நடக்கவும், சிலைகளை உடைத்தெறியவும், அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கப்பட வேண்டும், அவனுக்கு எதையும் இணையாக்கப்படக்கூடாது என்பதற்காகவும் (என்னை) அனுப்பியுள்ளான்" என்று கூறினார்கள்.
"இவ்விஷயத்தில் உங்களுடன் இருப்பவர் யார்?" என்று நான் கேட்டேன். அவர்கள், "ஒரு சுதந்திரமானவரும் ஓர் அடிமையும்" என்று கூறினார்கள். (அச்சமயம் அபூபக்ர் (ரழி) அவர்களும், பிலால் (ரழி) அவர்களும் மட்டுமே அவர்களுடன் இருந்தார்கள்). நான், "நானும் உங்களைப் பின்பற்றுகிறேன்" என்றேன். அதற்கு அவர்கள், "இன்றைய நாளில் உங்களால் அதைச் செய்ய முடியாது. என்னுடைய நிலையையும் மக்களின் நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா? எனவே, நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லுங்கள். நான் (வெற்றியாளனாக) வெளிப்பட்டுவிட்டேன் என்று நீங்கள் கேள்விப்பட்டால் என்னிடம் வாருங்கள்" என்று கூறினார்கள்.
எனவே நான் என் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றேன். நான் என் குடும்பத்தாருடன் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். மதீனாவிற்குச் செல்லும் மக்கள் மூலம் நான் அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டேயிருந்தேன். பின்னர் மதீனாவிலிருந்து என் ஊரைச் சேர்ந்த சிலர் வந்தனர். அவர்களிடம், "மதீனாவிற்கு வந்த அந்த மனிதரின் நிலை என்ன?" என்று கேட்டேன். அவர்கள், "மக்கள் அவரை நோக்கி விரைந்து செல்கின்றனர். அவருடைய சமுதாயத்தினர் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர், ஆனால் அவர்களால் அது முடியவில்லை" என்று கூறினர்.
பிறகு நான் மதீனாவிற்குச் சென்று அவரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னை உங்களுக்குத் தெரிகிறதா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம், மக்காவில் என்னைச் சந்தித்தவர் நீங்கள்தானே?" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றில் நான் அறியாதவற்றை எனக்குக் கற்றுக் கொடுங்கள். தொழுகையைப் பற்றி எனக்குக் கூறுங்கள்" என்றேன்.
அவர்கள் கூறினார்கள்: "ஸுபுஹ் (காலை) தொழுகையைத் தொழுங்கள். பின்னர் சூரியன் உதயமாகி ஒரு ஈட்டியின் அளவு உயரும் வரை தொழுவதை நிறுத்துங்கள். ஏனெனில் அது உதிக்கும்போது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு இடையில் உதிக்கிறது; அந்த நேரத்தில் இறைமறுப்பாளர்கள் அதற்குச் சிரம் பணிகிறார்கள். பின்னர் தொழுங்கள். ஏனெனில் தொழுகை (வானவர்களால்) பார்க்கப்படக் கூடியதாகவும் சாட்சியளிக்கப்படக் கூடியதாகவும் இருக்கிறது. நிழல் (சுருங்கி) ஈட்டியின் அளவுக்கு வரும் வரை (நண்பகல் நேரம் வரை) தொழலாம். பின்னர் தொழுவதை நிறுத்துங்கள். ஏனெனில் அந்த நேரத்தில் நரகம் எரிக்கப்படுகிறது (சூடாக்கப்படுகிறது). பின்னர் நிழல் (கிழக்கே) திரும்பியதும் தொழுங்கள். ஏனெனில் தொழுகை சாட்சி சொல்லக்கூடியதாகவும், வானவர்கள் அதில் கலந்துகொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் அஸ்ர் தொழுகையை நிறைவேற்றும் வரை (தொழலாம்). பின்னர் சூரியன் மறையும் வரை தொழுவதை நிறுத்துங்கள். ஏனெனில் அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு இடையில் மறைகிறது. அந்த நேரத்தில் இறைமறுப்பாளர்கள் அதற்குச் சிரம் பணிகிறார்கள்."
பிறகு நான், "அல்லாஹ்வின் தூதரே! உளூவைப் பற்றி எனக்குக் கூறுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் உளூ செய்வதற்காகத் தண்ணீரை எடுத்து, வாய்க்கும் மூக்கிற்கும் நீர் செலுத்திச் சுத்தம் செய்தால், அவருடைய முகம், வாய் மற்றும் மூக்குத் துவாரங்களின் பாவங்கள் (நீருடன்) உதிர்ந்து விடுகின்றன. பின்னர் அல்லாஹ் கட்டளையிட்டபடி அவர் தமது முகத்தைக் கழுவும்போது, முகத்தின் பாவங்கள் தாடியின் ஓரங்கள் வழியாக நீருடன் உதிர்ந்து விடுகின்றன. பின்னர் முழங்கைகள் வரை கைகளைக் கழுவும்போது, கைகளின் பாவங்கள் விரல் நுனிகள் வழியாக நீருடன் உதிர்ந்து விடுகின்றன. பின்னர் தலையை மஸ்ஹு செய்யும்போது, தலைமுடியின் ஓரங்கள் வழியாகத் தலையின் பாவங்கள் நீருடன் உதிர்ந்து விடுகின்றன. பின்னர் கணுக்கால் வரை கால்களைக் கழுவும்போது, கால்விரல் நுனிகள் வழியாகக் கால்களின் பாவங்கள் நீருடன் உதிர்ந்து விடுகின்றன. பிறகு அவர் (தொழுகைக்காக) நின்று, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனைக் கண்ணியப்படுத்தி, அவனுக்குத் தகுதியானவற்றைக் கொண்டு அவனைத் துதித்து, தனது உள்ளத்தை அல்லாஹ்வுக்காக முழுமையாக (உலக சிந்தனைகளிலிருந்து) இனைத்துவிட்டால், அவர் தமது தாயார் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று தமது பாவங்களிலிருந்து (தூய்மையாகி) வெளியேறுவார்."
அம்ர் பின் அபஸா (ரழி) அவர்கள் இந்த ஹதீஸை நபித்தோழரான அபூ உமாமா (ரழி) அவர்களிடம் கூறியபோது, அபூ உமாமா (ரழி) அவர்கள் அவரிடம், "அம்ர் பின் அபஸா அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கவனித்துப் பாருங்கள்! ஒரே இடத்தில் (நிற்கும்) ஒரு மனிதருக்கு இவை அனைத்தும் கிடைத்துவிடுமா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அம்ர் (ரழி) அவர்கள், "அபூ உமாமா அவர்களே! எனக்கு வயது முதிர்ந்துவிட்டது; என் எலும்புகள் வலுவிழந்துவிட்டன; என் மரணம் நெருங்கிவிட்டது. அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் (ஸல்) மீதும் நான் பொய் சொல்ல வேண்டியத் தேவை எனக்கில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இதை ஒரு முறை, இரு முறை, மூன்று முறை என்று ஏழு முறை வரை (அவர் எண்ணினார்) கேட்டிருக்காவிட்டால், நான் இதை ஒருபோதும் அறிவித்திருக்க மாட்டேன். ஆனால், அதைவிட அதிகமாகவே நான் (இதை அவரிடமிருந்து) கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம்)