அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என்னை மணமுடித்தார்கள்; எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் இல்லறத்தைத் தொடங்கினார்கள். நாங்கள் மதீனாவுக்குச் சென்றோம். அங்கு எனக்கு ஒரு மாத காலமாக காய்ச்சல் இருந்தது. (அதனால் உதிர்ந்த) என் தலைமுடி (மீண்டும் வளர்ந்து) காது மடல்கள் வரை இருந்தது. (என் தாயார்) உம்மு ரூமான் என்னிடம் வந்தார்கள்; அப்போது நான் என் தோழிகளுடன் ஊஞ்சலில் இருந்தேன். அவர்கள் என்னை சத்தமாக அழைத்தார்கள்; நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் என்ன நாடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் என் கையைப் பிடித்து, என்னை (வீட்டு) வாசலில் நிறுத்தினார்கள். என் மூச்சிரைப்பு அடங்கும் வரை நான் 'ஹஹ், ஹஹ்' என்று (பெருமூச்சு) விட்டுக்கொண்டிருந்தேன். (மூச்சு அடங்கியதும்) அவர்கள் என்னை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்; அங்கு அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், "(உனக்கு) நன்மையும் பரக்கத்தும் (உண்டாகட்டும்); சிறந்த நற்பேறும் (கிடைக்கட்டும்)" என்று வாழ்த்தினார்கள். என் தாயார் என்னை அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் என் தலையைக் கழுவி, என்னை அலங்கரித்தார்கள். முற்பகல் (லுஹா) நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திடீரென அங்கு) வந்ததைத் தவிர வேறெதுவும் என்னைத் திடுக்கிடச் செய்யவில்லை. பிறகு அவர்கள் என்னை அவரிடம் ஒப்படைத்தார்கள்.