நாங்கள் ரபதாவில் அபூ தர்ர் (ரழி) அவர்களைச் சந்தித்தோம். அவர்கள் மீது ஒரு மேலாடை இருந்தது; மேலும் அவர்களுடைய அடிமை மீதும் அதுபோன்ற ஒன்று இருந்தது. நாங்கள், "அபூ தர்ர் அவர்களே! நீங்கள் அவ்விரண்டையும் சேர்த்திருந்தால், அது ஒரு முழுமையான ஆடையாக ஆகியிருக்குமே?" என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: "எனக்கும் என்னுடைய சகோதரர்களில் ஒருவருக்கும் இடையில் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. அவருடைய தாயார் அரபி அல்லாதவர். நான் அவருடைய தாயாரைக் குறித்து அவரை இழிவாகப் பேசினேன். அவர் எனக்கெதிராக நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது, அவர்கள், 'அபூ தர்ரே! நீர் அறியாமைக் காலத்து குணம் குடிகொண்டிருக்கும் ஒரு மனிதராகவே இருக்கிறீர்' என்று கூறினார்கள்."
நான், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! யார் (மற்ற) மனிதர்களைத் திட்டுகிறாரோ, அவர்கள் (பதிலுக்கு) அவருடைய தந்தையையும் தாயாரையும் திட்டுகிறார்கள்" என்று கூறினேன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அபூ தர்ரே! நீர் அறியாமைக் காலத்து குணம் குடிகொண்டிருக்கும் ஒரு மனிதராகவே இருக்கிறீர். அவர்கள் உங்கள் சகோதரர்கள்; அல்லாஹ் அவர்களை உங்கள் அதிகாரத்திற்குக்கீழ் வைத்திருக்கிறான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்தே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதைப் போன்றே அவர்களுக்கும் உடுத்தக் கொடுங்கள். அவர்களுடைய சக்திக்கு மீறிய வேலைகளை அவர்கள் மீது சுமத்தாதீர்கள்; அவ்வாறு நீங்கள் அவர்கள் மீது (வேலையைச்) சுமத்தினால், அவர்களுக்கு உதவுங்கள்."