பக்கம் - 115 -
இவ்வாறான அற்பத்தனமிக்க பேச்சுவார்த்தைகளைத் தீர்க்கமான முடிவைக்கொண்டு அல்லாஹ் முறியடித்தும் குறைஷிகள் முழுமையாக நிராசையாகவில்லை. மாறாக, மேலும் சற்று இறங்கி நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனின் போதனைகளில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்ற அடுத்த கோரிக்கையை முன்வைத்தனர். இதோ இவர்களின் கூற்றைப்பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உங்களை நோக்கி,) “இது அல்லாத வேறொரு குர்ஆனை நீங்கள் கொண்டுவாருங்கள். அல்லது (எங்கள் இஷ்டப்படி) இதனை மாற்றிவிடுங்கள்” என்று கூறுகின்றனர்.
அவர்களின் இக்கூற்றுக்கு என்ன பதில் சொல்லவேண்டுமோ அதை அல்லாஹ் தொடர்ந்து கூறுகிறான்:
(அதற்கு அவர்களை நோக்கி “உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதனை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என்னுடைய இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் 10:15)
மேலும், இவ்வாறு செய்வது எவ்வளவு ஆபத்தானது என்றும் அல்லாஹ் மிகத் தெளிவாக எச்சரிக்கை செய்தான்.
நாம் உங்களுக்கு வஹி மூலம் அறிவித்ததை நீங்கள் விட்டு (விட்டு) அது அல்லாததை நம்மீது நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உங்களை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீங்கள் செய்திருந்தால்) உங்களை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உங்களை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீங்கள் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடக் கூடுமாயிருந்தது. (அவ்வாறு நீங்கள் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீங்கள் உயிராக இருக்கும்போதும் நீங்கள் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.(அல்குர்ஆன் 17:73-75)
மறு ஆலோசனை
எல்லா பேச்சுவார்த்தைகளிலும், பேரங்களிலும், அனுசரித்தலிலும் குறைஷிகள் தோல்வியடைந்து என்னசெய்வது என்று புரியாமல் திகைத்திருந்தபோது அவர்களில் ஒரு ஷைத்தான் “நழ்ர் இப்னு அல் ஹாரிஸ்’ என்பவன் ஓர் ஆலோசனையைக் கூறினான். “குறைஷியர்களே! உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வையும் உங்களால் கொண்டுவர முடியவில்லை. முஹம்மது உங்களில் வாலிபராக இருந்தபோது உங்களின் அன்பிற்குரியவராகவும், பேச்சில் உங்களில் உண்மையாளராகவும், அமானிதத்தை அதிகம் பேணுபவராகவும் இருந்தார். ஆனால், அவர் முதிர்ச்சி அடைந்து இம்மார்க்கத்தை அவர் கொண்டு வந்தபோது நீங்கள் அவரை “சூனியக்காரர்” என்று கூறினீர்கள். ஆனால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் சூனியக்காரராக இருக்க முடியாது. சூனியக்காரர்களைப் பற்றியும் அவர்களின் ஊதுதல், முடிச்சுகளைப் பற்றியும் நாம் நன்கறிவோம். பிறகு அவரை “ஜோசியர்” என்று கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோசியரும் அல்லர். ஏனெனில் ஜோசியக்காரர்களையும் அவர்களது பொய்யாகப் புனையப்பட்ட புளுகுகளையும் நாம் நன்கறிவோம். அடுத்து அவரை “கவிஞர்” என்பதாகக் கூறினீர்கள்.