பக்கம் - 123 -
இவர்கள் விஷயத்தில்தான் இந்த வசனங்கள் அருளப்பட்டன:
“ஸாத் - நல்லுபதேசங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனின் மீது சத்தியமாக! (இது நம்மால்தான் அருளப்பட்டது. இதனை) நிராகரிப்பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர்.
இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கின்றோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாக இருக்கவில்லை.
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர் (ஆகிய நீங்கள்) அவர்களிலிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, “இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) அந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
“என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்” (என்று கூறி,) அவர்களிலுள்ள தலைவர்கள், (மற்றவர்களை நோக்கி, “இவரை விட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாக இருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இவ்விஷயத்தில் ஏதோ (சுயநலந்தான்) கருதப்படுகின்றது” என்று கூறிக் கொண்டே சென்றுவிட்டனர்.
“முன்னுள்ள வகுப்பாலும், இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே அன்றி வேறில்லை” என்றும், “நம்மைவிட்டு இவருக்கு மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டு விட்டது” என்றும் (கூறினார்கள்). (அல்குர்ஆன் 38:1-8) (இப்னு ஹிஷாம், திர்மிதி, முஸ்னது அபீ யஃலா, இப்னு ஜரீர்)