பக்கம் - 142 -


நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு துல்காயிதா மாதத்தில் (ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கம் கி.பி. 619ல்) நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குத் திரும்பினார்கள். பல கோத்திரங்களுக்கும் தனி நபர்களுக்கும் இஸ்லாமை மீண்டும் புதிதாக அறிமுகப்படுத்தினார்கள். ஹஜ்ஜுடைய காலம் நெருங்கியபோது மக்கள் அனைவரும் பல திசைகளிலிருந்து ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு வந்த வண்ணமிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சென்று அவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தி, அதன்பக்கம் அழைப்புக் கொடுத்தார்கள். நபித்துவத்தின் நான்காவது ஆண்டிலிருந்து இப்படித்தான் அம்மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்து வந்தார்கள். ஆனால், இந்த பத்தாவது ஆண்டு மேலும் ஒரு கோரிக்கையையும் அவர்களுக்கு முன் வைத்தார்கள். அதாவது, நான் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து வைப்பதற்கு எனக்கு இடம் கொடுத்து உதவி செய்து எதிரிகளிடமிருந்து எனக்கு பாதுகாப்பு அளியுங்கள் என்று அம்மக்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.

இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட கோத்திரத்தினர்

இமாம் ஜுஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் பல கோத்திரத்தாரிடம் சென்று இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் பெயர்களாவன:

ஆமிர் இப்னு ஸஃஸஆ கிளையினர்: முஹாப்னு கஸ்ஃபஹ், ஃபஜாரா, கஸ்ஸான், முர்ரா, ஹனீஃபா, ஸுலைம், அப்ஸ், பனூ நஸ்ர், பனூ பக்கா, கிந்தா, கல்ப், ஹாரிஸ் இப்னு கஅப், உத்ரா, ஹழாமா ஆகிய கோத்திரத்தாருக்கு ஓரிறைக் கொள்கையை இதமாக எடுத்துரைத்தும் அவர்களில் எவரும் அழைப்பை ஏற்கவில்லை. (இப்னு ஸஅத்)

மேற்கண்ட அனைத்து கோத்திரத்தாரையும் ஒரே ஆண்டுக்குள் அல்லது ஒரே ஹஜ் காலத்திலேயே அழைத்திடவில்லை. நபித்துவத்தின் நான்காம் ஆண்டு மெல்ல மெல்லத் தொடங்கிய இந்த பகிரங்க அழைப்புப் பணி நபி (ஸல்) அவர்கள் மதீனா செல்லும்வரை நீடித்தது. எனவே, இன்ன கோத்திரத்தாரை இன்ன ஆண்டுதான் அழைத்தார்கள் என்று குறிப்பிட்டுக் கூறிட முடியாது. என்றாலும் பெரும்பாலான கோத்திரத்தாரை நபித்துவத்தின் பத்தாம் ஆண்டுதான் அழைத்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் அழைப்பை இந்த கோத்திரத்தார் எவ்வாறு எடுத்துக் கொண்டனர் என்பதைக் குறித்து இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதை சுருக்கமாகக் காண்போம்:

1) ‘கல்ப்’ கிளையினர்: நபி (ஸல்) அவர்கள் இவர்களின் உட்பிரிவான அப்துல்லாஹ் உடைய குடும்பத்தாரை, “அப்துல்லாஹ்வின் மக்களே! அல்லாஹ் உங்கள் தந்தைக்கு எத்துணை அழகிய பெயரை வழங்கியிருக்கின்றான்” என்றெல்லாம் நயமாக கூறி அழைத்துப் பார்த்தார்கள். எதற்கும் அவர்கள் அசையவில்லை.

2) ‘ஹனீஃபா’ கிளையினர்: இம்மக்களின் வீடு வீடாகச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அழைத்துப் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் அதை ஏற்காதது மட்டுமின்றி, நபி (ஸல்) அவர்களிடம் முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்டனர்.