பக்கம் - 154 -
இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். “உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை ‘சித்தீக்’ (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

இந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக “நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன் அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறு பவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)

இது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.

இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம். (அல்குர்ஆன் 6:75)

நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி,

(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரியஅத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம். (அல்குர்ஆன் 20:23)

என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.