பக்கம் - 162 -
நாங்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்து அக்கணவாயில் கூடினோம். நபி (ஸல்) அவர்களுடன் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபும் வந்தார்கள். அந்நேரத்தில் அவர் முஸ்லிமாக இல்லை. எனினும், தனது அண்ணன் மகனுடைய செயல்பாடு மற்றும் நடைமுறைகளை சரிவரத் தெரிந்து கொள்வதற்காகவும் அவருக்காக அன்சாரிகளிடம் உறுதிமொழி வாங்குவதற்காகவும் அங்கு வந்திருந்தார். அவரே குழுமியிருந்தவர்களில் முதலாவதாகப் பேசத் தொடங்கினார்.” (இப்னு ஹிஷாம்)
உரையாடலின் தொடக்கமும் அப்பாஸின் விளக்கமும்
அனைவரும் சபையில் ஒன்று கூடியபின் மார்க்க ரீதியான மற்றும் நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பது தொடர்பான ஒப்பந்தங்களை உறுதிப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் தொடங்கின. முதலில் நபி (ஸல்) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் பேசினார். அவர் தனது பேச்சில் இந்த நட்பு ஒப்பந்தத்தின் விளைவாக தங்களின் தோள்களில் சுமக்க இருக்கும் பொறுப்பு எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு பெரிய பின்விளைவுகளைக் கொண்டது என்பதை மிகத் தெளிவாக அன்சாரிகளுக்கு விவரித்தார். இதோ அப்பாஸ் அவர்களின் பேச்சின் சுருக்கம்:
“கஸ்ரஜ் கூட்டத்தினரே! நிச்சயமாக முஹம்மது எங்களிடம் எவ்வாறு இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள் கூட்டத்தில் எங்களது (ஷிர்க்-இணைவைக்கும்) கொள்கையின் மீது இருப்பவர்களிடமிருந்து நாம் அவரை இதுநாள் வரை பாதுகாத்து வந்திருக்கிறோம். அவர் எங்களது கூட்டத்தில் கண்ணியமாக, அதே நேரத்தில் அவரது ஊரில் பாதுகாப்புடனும்தான் இருக்கின்றார். எனினும், அவர் உங்களுடன் இணைந்துவிடவும், உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார். நீங்கள் அவருக்கு தரும் வாக்கைக் காப்பாற்றி எதிரிகளிடமிருந்து அவரை பாதுகாப்பவர்களாக இருந்தால் அவரை அழைத்துச் செல்லலாம். இல்லை, ‘நீங்கள் அவரை எதிரிகளிடம் ஒப்படைத்து விடுவீர்கள். இங்கிருந்து அழைத்துச் சென்றவுடன் கைவிட்டு விடுவீர்கள்’ என்றிருப்பின் இப்போதே அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர் தனது கூட்டத்தினருடன் தனது ஊரில் கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் தான் இருக்கின்றார்.”
அப்பாஸின் இந்த உரையாடலுக்குப் பின் கஅப் “நீங்கள் கூறியதை நாங்கள் கேட்டு விட்டோம் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பேசுங்கள். உங்களுக்கும் உங்களது இறைவனுக்கும் நீங்கள் விரும்பியதையெல்லாம் எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். (இப்னு ஹிஷாம்)
அன்சாரிகளின் உறுதியையும், வீரத்தையும், இந்த மகத்தான பொறுப்பையும், அதன் விபரீதமான பின்விளைவுகளையும் தாங்கிக் கொள்வதில் அவர்களிடம் இருந்த உறுதியையும் மனத் தூய்மையையும் இந்த பதில்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். கஅப் கூறிய பிறகு நபி (ஸல்) அவர்களின் உரையும் அதற்குப் பின் உறுதிமொழி வாங்குவதும் நடைபெற்றது.
ஒப்பந்தத்தின் அம்சங்கள்
ஜாபிர் (ரழி) இதைப்பற்றி மிக விரிவாக அறிவிக்கிறார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எந்த விஷயங்களுக்காக நாங்கள் உங்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்ய வேண்டு”ம் என்று கேட்க அதற்கு விளக்கமாக நபி (ஸல்) கூறினார்கள்