பக்கம் - 166 -
அதாவது, ஈஸா இப்னு மர்யமுக்கு அவரது உற்றத் தோழர்கள் பொறுப்பாளிகளாக இருந்தது போன்று நீங்கள் உங்களது கூட்டத்தினரின் காரியங்களுக்கு பொறுப்பாளிகளாவீர்கள். நான் முழு முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் பொறுப்பாளி ஆவேன் என்று நபி (ஸல்) கூற இதை அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். (இப்னு ஹிஷாம்)
ஷைத்தான் கூச்சலிடுகிறான்
நள்ளிரவில் இரகசியமாக நடைபெற்ற உடன்படிக்கை முழுமையாக நிறைவுபெற்று, கூட்டத்தினர் அனைவரும் பிரிந்து செல்ல இருக்கும் நேரத்தில், ஷைத்தான்களில் ஒருவனுக்கு அந்த ஒப்பந்தத்தைப் பற்றி தெரிய வந்தவுடன் அதைப் பகிரங்கப்படுத்துவதற்காக கூச்சலிட்டான். கடைசி தருணத்தில்தான் அவனுக்கு உடன்படிக்கை தெரியவந்ததால் குறைஷி தலைவர்களுக்கு இந்தச் செய்தியை முன்கூட்டியே தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, முஸ்லிம்கள் ஒன்று சேர்வதிலிருந்து அவர்களைத் தடுக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்படவில்லை. உடனடியாக அந்த ஷைத்தான் அங்குள்ள ஓர் உயரமான இடத்தில் ஏறி நின்றுகொண்டு மிக பயங்கரமான சப்தத்தில் “ஓ! கூடாரத்தில் தங்கியிருப்பவர்களே! இதோ இந்த இழிவுக்குரியவரையும் அவருடன் மதம்மாறி சென்றவர்களையும் நீங்கள் பார்க்க வேண்டாமா? இவர்களெல்லாம் உங்கள் மீது போர் தொடுக்க வேண்டுமென ஒன்றுகூடி இருக்கின்றனர்” என்று கூச்சலிட்டான்.
அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இவன் இந்தக் கணவாயின் ஷைத்தான்” என்று கூறி அந்த ஷைத்தானை நோக்கி “ஏய் அல்லாஹ்வின் எதிரியே! அதிவிரைவில் நான் உனது கணக்கை முடித்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்தவர்களிடம் அவரவர் கூடாரங்களுக்குக் கலைந்து செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள். (இப்னு ஹிஷாம்)
இந்த ஷைத்தானின் பேச்சைக் கேட்ட அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நள்லா “உங்களை உண்மையைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக! நீங்கள் விரும்பினால் நாளை இங்கு தங்கியிருக்கும் மினாவாசிகள் அனைவர் மீதும் நாங்கள் வாளேந்தி போர் தொடுக்கிறோம்” என்று கூறினார். ஆனால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நமக்கு அவ்வாறு கட்டளை இடப்படவில்லை. இப்போது நீங்கள் உங்களது கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்று தங்களது கூட்டத்தினருடன் உறங்கிக் கொண்டார்கள். (இப்னு ஹிஷாம்)
குறைஷிகளின் எதிர்ப்பு
இந்த உடன்படிக்கையின் செய்தி குறைஷிகளின் காதுகளுக்கு எட்டியவுடன் அவர்களுக்கு மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களைத் துக்கங்களும் கவலைகளும் ஆட்கொண்டன. இதுபோன்ற உடன்படிக்கை ஏற்பட்டால் அதன் முடிவுகளும் விளைவுகளும் எப்படி இருக்கும் என்பதை குறைஷிகள் நன்கு அறிந்திருந்ததால் நிலைமை என்னவாகுமோ என்று பயந்து சஞ்சலத்திற்கு உள்ளாயினர். எனவே, அதிகாலையில் மக்காவாசிகளுடைய தலைவர்களின் ஒரு மாபெரும் குழு இவ்வுடன்படிக்கைக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவிப்பதற்காக மதீனாவாசிகளிடம் வந்தனர்.
“கஸ்ரஜ் கூட்டத்தினரே! எங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவரை எங்களிடமிருந்து வெளியேற்ற விரும்புகின்றீர்களா? எங்கள் மீது போர் தொடுக்க அவருடன் நீங்கள் உடன்படிக்கை செய்கின்றீர் களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கும் நமக்கும் மத்தியில் போரை நாங்கள் அறவே விரும்பவில்லை” என்று அந்தக் குழு மதீனாவாசிகளிடம் கூறினர். (இப்னு ஹிஷாம்)