பக்கம் - 168 -
இதுதான் அகபாவின் இரண்டாவது உடன்படிக்கை ஆகும். இதற்கு ‘அகபாவின் மாபெரும் உடன்படிக்கை’ என்றும் பெயர் கூறப்படும். இந்த உடன்படிக்கை அன்பு, ஆதரவு என்ற உணர்ச்சிகளுடனும், முஸ்லிம்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பினும் தங்களுக்குள் உதவி, ஒத்தாசை செய்து கொள்ள வேண்டும் அல்லாஹ்வின் வழியிலே தங்களது வீரத்தையும், உறுதியையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகளுடனும் நிறைவு பெற்றது. மதீனாவில் வாழும் ஒரு முஸ்லிம் மக்காவில் வாழும் பலவீனமான தன் சகோதர முஸ்லிம் மீது இரக்கம் காட்டுகிறார் அவருக்காக உணர்ச்சி வசப்படுகிறார் அவர் மீது அநியாயம் செய்பவர்களை வெறுக்கிறார் தனது முஸ்லிமான சகோதரர் தன்னைவிட்டு மறைந்திருந்தாலும் அல்லாஹ்விற்காக அவர் மீது அன்பின் உணர்வுகள் இவரது உள்ளத்தில் ஊற்றெடுக்கின்றன. இந்த உணர்வுகளும், உணர்ச்சிகளும் காலத்தால் நீங்கிவிடக்கூடியதல்ல. ஏனெனில், இதன் பிறப்பிடம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அவனது வேதத்தையும் நம்பிக்கை கொண்டதால் உருவானதாகும்.
இந்த இறைநம்பிக்கையை உலகத்தின் எந்த ஓர் அநியாயமான அல்லது வரம்புமீறிய சக்தியாலும் நீக்கிவிட முடியாது. இந்த இறைநம்பிக்கை எனும் புயல் வீச ஆரம்பித்தால் கொள்கையிலும், செயல்களிலும் வியக்கத்தக்க மாபெரும் ஆச்சரியங்களைப் பார்க்கலாம். இந்த ஈமானை (இறைநம்பிக்கையை) அடைந்ததின் மூலமாகத்தான் முஸ்லிம்கள் வரலாற்றுப் பக்கங்களில் தங்களது செயல்களைப் பதித்து மாறாத அடிச்சுவடுகளை விட்டுச் செல்ல முடிந்தது. அதுபோன்ற வீரச்செயல்களும், அடிச்சுவடுகளும் கடந்த காலத்திலும் இல்லை தற்காலத்திலும் இல்லை இனிவரும் காலங்களிலும் இருக்காது.