பக்கம் - 174 -
இதைக் கேட்ட நஜ்து தேச கிழவன் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது ஒரு யோசனையே அல்ல. நீங்கள் அவரை அடைத்து வைத்தாலும் அவருடைய தோழர்களுக்கு அவரைப் பற்றிய செய்தி தெரிந்து, உங்கள் மீது பாய்ந்து அவரை உங்களிடருந்து விடுவித்து விடுவார்கள். பிறகு உங்களையும் அவர்கள் வீழ்த்தி விடலாம். எனவே, இதுவும் ஒரு யோசனையே அல்ல. வேறு ஒரு யோசனை சொல்லுங்கள்” என்றான்.
இவ்விரண்டு யோசனைகளையும் அம்மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டபோது, மக்கா அயோக்கியர்களில் மிகப்பெரும் கொடியவனான “அபூஜஹ்ல்’ ஒரு யோசனையைக் கூறினான். அந்த யோசனையை அரக்க குணம் படைத்த அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு யோசனை இருக்கின்றது. அது உங்களுக்குத் தோன்றியிருக்காது” என்று அபூஜஹ்ல் கூற, “அபுல் ஹிகமே! அது என்ன யோசனை” என்றனர் மக்கள். அதற்கு அபூஜஹ்ல் “நாம் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் நல்ல வீரமிக்க, குடும்பத்தில் சிறந்த, ஒரு வாலிபரைத் தேர்வு செய்து, ஒவ்வொரு வாலிபனுக்கும் மிகக் கூர்மையான வாள் ஒன்றையும் கொடுப்போம். அவர்கள் அனைவருமாக சேர்ந்து அவரை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கொன்றுவிடட்டும். அவர் இறந்துவிட்டால் நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம். கொலை செய்தவர்கள் பல கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவன் உறவினர்களான அப்து மனாஃப் கிளையினர் பழிக்கு யாரையும் கொல்ல முடியாது. முழு அரபு சமுதாயத்தினரையும் பகைத்துக் கொண்டு அப்து மனாஃப் கிளையினர் நம்மீது போர் தொடுக்க முடியாது. எனவே, கொலைக்குப் பகரமாக அபராதத் தொகையை நிர்பந்தமாக ஏற்றுக் கொள்வார்கள். நாமும் அவர்களுக்கு அந்த அபராதத்தைக் கொடுத்து விடலாம்” என்று அரக்கன் அபூஜஹ்ல் கூறிமுடித்தான்.
நஜ்து தேச அயோக்கியக் கிழவன் (அவன்தான் இப்லீஸ்) இதைக் கேட்டுவிட்டு “ஆஹா! இதல்லவா யோசனை! இதுதான் சரியான யோசனை! இதைத் தவிர வேறெதுவும் சரியான யோசனையல்ல” என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)
இந்தக் கருத்தை அனைத்து பிரமுகர்களும் தலைவர்களும் ஏற்றுக் கொண்டு, வெகு விரைவில் இதை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.