பக்கம் - 179 -
அபூபக்ர் (ரழி) மகனார் அப்துல்லாஹ்வும் அங்கு சென்று இரவு தங்குவார். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் புத்திசாலியான நல்ல அறிவுள்ள வாலிபராக இருந்தார். அவ்விருவருடன் தங்கிவிட்டு, இரவின் இறுதிப் பகுதியில் வெளியேறி, விடிவதற்குள் மக்கா வந்து விடுவார். அவ்விருவரைப் பற்றி ஏதாவது செய்திகளை மக்காவில் கேட்டால், அதை நினைவில் வைத்துக்கொண்டு இருள் சூழ்ந்தவுடன் இருவரிடமும் சென்று அந்தச் செய்தியை எடுத்துரைப்பார்.
அபூபக்ர் (ரழி) அவர்களின் அடிமையான ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரழி) அங்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்து விட்டு மாலை சாய்ந்தவுடன் அவ்விருவருக்கும் ஆட்டுப் பாலைக் கறந்து தருவார். இவ்வாறு மூன்று இரவுகள் அவர் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். (ஸஹீஹுல் புகாரி)
அதிகாலையில் அப்துல்லாஹ் இப்னு அபூபக்ர் (ரழி) ‘ஸவ்ர்’ குகையிலிருந்து வெளியேறி மக்காவிற்குச் செல்லும்போது ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரழி) தனது ஆடுகளை அப்துல்லாஹ்வின் காலடித் தடங்கள் மீது ஓட்டிச் சென்று அவற்றை அழித்துவிடுவார். (இப்னு ஹிஷாம்)
“நபி (ஸல்) தப்பித்துவிட்டார்கள்’ என்ற செய்தியைக் காலையில் குறைஷிகள் உறுதியாக தெரிந்து கொண்டபோது அவர்களுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. நபி (ஸல்) அவர்களைப் பற்றி அலீ (ரழி) அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சரியாக பதில் கூறாததால், அவர்களை கடுமையாக அடித்து கஅபாவுக்கு இழுத்து வந்து சில மணி நேரம் அங்கேயே பிடித்து வைத்திருந்தனர். (தாரீக் தபரீ)
அலீ (ரழி) அவர்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்காததால் அபூபக்ரின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்து வெளியே வந்த அபூபக்ரின் மகளார் அஸ்மாவிடம் “உனது தந்தை எங்கே?” என்றனர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குத் தெரியாது” என்றார் அவர். இந்தப் பதிலைக் கேட்ட தீயவன் ‘அபூஜஹ்ல்“, அவரது கன்னத்தில் அறைந்தான். இதனால் அவன் காது தோடு அறுந்து கீழே விழுந்தது. (இப்னு ஹிஷாம்)
உடனே, அவசரமாக ஆலோசனை சபையைக் கூட்டிய குறைஷிகள் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் பிடிப்பதற்கு அனைத்து வழிகளையும் கையாள வேண்டுமென முடிவு செய்தனர். மக்காவிலிருந்து வெளியேறும் அனைத்துத் திசைகளையும் ஆயுதமேந்திய வீரர்களின் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கினார்கள். “நபி (ஸல்) அபூபக்ர் (ரழி) இவ்விருவல் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிக்கப்படும் இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவிற்கு கொண்டு வருகிறார்களோ அவர் யாராக இருப்பினும் சரிஅவருக்கு இந்தப் பரிசுஉண்டு” என்று பொது அறிவிப்பு செய்தனர். (ஸஹீஹுல் புகாரி)
அப்போது கால்நடை வீரர்கள், குதிரை வீரர்கள், காலடி நிபுணர்கள் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் சல்லடை போட்டு மலைகள், பாலைவனங்கள், காடுகள், பள்ளத்தாக்குகள் என அனைத்து இடங்களிலும் வலை வீசி தேடினர். ஆனால், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளவர்களை அவர்களால் எப்படி கண்டுகொள்ள முடியும்?
எதிரிகள் நபி (ஸல்) அவர்களைத் தேடி அலைந்து அவர்கள் தங்கியிருந்த குகைவாசலை வந்தடைந்தனர். இதைப் பற்றி அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் குகையில் தங்கியிருந்தபோது எனது தலையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது எதிரிகளின் பாதங்கள் தெரிந்தன. நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது தங்களது பார்வையைத் தாழ்த்தினால் நம்மை பார்த்துவிடுவார்களே” என்று கூறினேன். நபி (ஸல்) “அபூபக்ரே! சும்மா இருங்கள். நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றான்.” என்றும் (மற்றொரு அறிவிப்பில்) “அபூபக்ரே! அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கும் இருவரைப் பற்றி உமது எண்ணமென்ன! (அப்படியிருக்க நாம் ஏன் பயப்படவேண்டும்?)” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)