பக்கம் - 183 -
அப்பெண், நபி (ஸல்) அவர்களின் அழகிய பண்புகளை கேட்பவர் கண்முன் காண்பது போன்று வருணித்துக் கூறினார். (இன்ஷா அல்லாஹ்! இந்த நூலின் இறுதியில் அந்த வருணனையை நாம் காண்போம்.) அப்போது அபூ மஅபத் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் குறைஷிகள் தேடும் மனிதர்தான். குறைஷிகள் இவரைப் பற்றி ஏராளம் கூறியிருக்கின்றனர். நான் அவருடன் தோழமை கொள்ள வேண்டுமென்று திட்டமாக நினைத்திருந்தேன். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் அதைச் செய்வேன்” என்றார்.
இந்நேரத்தில், மக்காவில் உள்ளவர்களோ உயர்ந்த சப்தம் ஒன்றைச் செவிமடுத்தார்கள். ஆனால், அந்த சப்தம் கொடுப்பவரை அவர்கள் பார்க்க முடியவில்லை. அந்த சப்தமாவது:
“அர்ஷின் அதிபதியான அல்லாஹ் நற்கூலி வழங்கட்டும்!
உம்மு மஅபதின் கூடாரத்தில் தங்கிச் சென்ற இரு தோழர்களுக்கு.
அவர்கள் நலமுடனே தங்கி நலமுடனே போனார்கள்.
முஹம்மதுக்கு தோழராகும் பாக்கியம் பெற்றவர் வெற்றியடைந்தார்.
குஸை வம்சமே! என்ன கைசேதம்! தலைமையையும் சிறப்பையும்
உங்களை விட்டுவிட்டு அல்லாஹ் அவருக்கு வழங்கி விட்டான்.
கஅபு குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் பல! அவருடைய திருமதியின் இல்லம் அருமையானது!
அது இறைவிசுவாசிகளுக்கு தங்குமிடமானது!
உங்கள் சகோதரியிடம் ஆடு, பாத்திரம் பற்றி வினவுங்கள்!
நீங்கள் ஆட்டிடம் கேட்டால் அதுவும் சான்று பகரும்!”
அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் எங்கு சென்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. அப்போது மக்காவின் கீழ் பகுதியிலிருந்து ஒரு ஜின் இக்கவிதைகளைப் பாடியது. மக்கள் சப்தம் வரும் திசையை நோக்கி சப்தத்தைக் கேட்டுக் கொண்டே சென்றார்கள். ஆனால் பாடுவது யார்? என்று தெரியவில்லை. பின்பு அந்த சப்தம் மக்காவின் மேல்புறத்தின் வழியாக மறைந்துவிட்டது. அந்த ஜின்னின் சப்தத்தைக் கேட்டபோது நபி (ஸல்) மதீனாவை நோக்கி சென்றிருக்கலாம் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். (ஜாதுல் மஆது, முஸ்தத்ரகுல் ஹாகிம்)
4) வழியில் சுராக்கா இப்னு மாலிக் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் கைது செய்ய வேண்டும் என்று பின்தொடர்ந்தார். இதைப் பற்றி சுராக்கா கூறுவதை நாம் கேட்போம்: நான் எனது கூட்டத்தினராகிய முத்லஜின் அவையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் விரைந்து வந்து “கடற்கரையில் சில மனிதர்களைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மதும் அவரது தோழர்களுமாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறினார். அது உண்மையில் அவர்கள்தான் என்பதை நான் விளங்கிக் கொண்டேன். இருந்தும் அதை வெளிக்காட்டாமல் “நீ பார்த்தது அவர்களல்ல! நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க, எங்கள் கண்முன் சென்ற இரண்டு நபர்களைத்தான் நீயும் பார்த்திருக்கிறாய்! நீ கூறுவது போன்று அவர்கள் முஹம்மதும் அவரது தோழர்களும் அல்லர்” என்று கூறி மழுப்பினேன். பிறருக்கு சந்தேகம் வராமலிருக்க சபையில் சிறிது நேரம் அமர்ந்திருப்பது போல் இருந்துவிட்டு எனது வீட்டுக்கு வந்தேன்.