பக்கம் - 188 -
அன்சாரிகள் மிகுந்த செல்வ செழிப்புடையவர்களாக இல்லையென்றாலும் நபி (ஸல்) அவர்களின் மீது அவர்கள் வைத்திருந்த பிரியத்தினால் ஒவ்வொருவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டில்தான் தங்கவேண்டுமென ஆசைபட்டனர். ஒவ்வொருவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டைக் கடந்து செல்லும்போது நபியவர்களின் வாகனக் கயிற்றை பிடித்துக்கொண்டு “அல்லாஹ்வின் தூதரே! பாதுகாப்பும், ஆயுதமும், படைபலமும், வீரர்களும் நிறைந்த எங்களிடம் வந்துவிடுங்கள்” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) தன்னை அழைத்தவர்களிடம் “வாகனத்திற்கு வழிவிடுங்கள். அது பணிக்கப்பட்டுள்ளது” என்று கூறிக்கொண்டே வந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வாகனம் தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தது. இறுதியில், தற்போது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அமையப் பெற்றிருக்கும் இடத்தில் மண்டியிட்டுக் கொண்டது. ஆனால், நபி (ஸல்) அதிலிருந்து இறங்கவில்லை. பின்பு சிறிது நேரத்தில் அந்த ஒட்டகம் எழுந்து சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தது பின்பு முதலில் மண்டியிட்ட அதே இடத்தில் மீண்டும் வந்து மண்டியிட்டு அமர்ந்துதது.
தங்கள் ஒட்டகத்திலிருந்து நபி (ஸல்) இறங்கினார்கள். மேலும், அந்த இடம் நபி (ஸல்) அவர்களின் தாய்மாமன்களாகிய நஜ்ஜார் கிளையினருக்கு சொந்தமானதாகும். நபி (ஸல்) அவர்களின் விருப்பத்திற்கேற்ப அல்லாஹ் அவர்களின் தாய்மாமன்களின் வீட்டிலேயே தங்குவதற்கு அருள் புரிந்தான். நஜ்ஜார் கிளையினரில் ஒவ்வொருவரும் நபி (ஸல்) அவர்களிடம் ‘நீங்கள் எங்களது வீட்டில் தங்க வேண்டும்’ என்று அழைத்துக் கொண்டிருக்கையில் அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்கள் மட்டும் நபி (ஸல்) அவர்களின் பயணச் சாமான்களை தங்களது வீட்டிற்குள் எடுத்துச் சென்று விட்டார்கள். இதைப் பார்த்த நபி (ஸல்) “மனிதன் அவனது சாமான்களுடன்தானே இருக்க முடியும்” என்று மற்றவர்களிடம் கூறினார்கள். அஸ்அத் இப்னு ஜுராரா நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் விருப்பப்படி நபி (ஸல்) அவர்களின் வாகனம் அவரிடம் இருக்க அனுமதிக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)
அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) “நமது உறவினர்களின் வீடுகளில் எது நெருக்கமாக இருக்கிறது” என்று கேட்டார்கள். அதற்கு அபூ அய்யூப் “அல்லாஹ்வின் தூதரே! இதோ எனது வீடு. இதுதான் எனது வீட்டு வாயில்” என்று கூறினார்கள். நபி (ஸல்) “சரி! எழுந்து சென்று படுக்கும் இடத்தை சரிசெய்யுங்கள்” என்று கூறினார்கள். “ரஸுலுல்லாஹ்வே! எல்லாம் தயார், அல்லாஹ்வின் பரக்கத்துடன் -அருள் வளத்துடன்- நீங்கள் இருவரும் எழுந்து வாருங்கள்” என்று அபூ அய்யூப் (ரழி) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
சில நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா (ரழி) அவர்களும் இரு மகள்கள் ஃபாத்திமா, உம்மு குல்தூம் மற்றும் உஸாமா இப்னு ஜைது, உம்மு அய்மன் ஆகியோர் மதீனா வந்தார்கள். இவர்களுடன் அபூபக்ரின் மகனார் அப்துல்லாஹ், அபூபக்ரின் குடும்பத்தாரையும் அழைத்து வந்தார்கள். இவர்களில் ஆயிஷாவும் இருந்தார். நபி (ஸல்) அவர்களின் இன்னொரு மகள் ஜைனபுடைய கணவர் அபுல்ஆஸ் ஹிஜ்ரா செல்ல சந்தர்ப்பமளிக்காததால் ஜைனப் (ரழி) மதீனா வர இயலவில்லை. இவர்கள் பத்ர் போருக்குப் பின் மதீனா வந்தார்கள். (ஜாதுல் மஆது)