பக்கம் - 203 -
15) இறைநம்பிக்கையாளர் ஒரு விஷமக்காரனுக்கு, கலகம் செய்பவனுக்கு உதவி செய்யக் கூடாது, அவனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எவர் ஒருவர் ஒரு விஷமக்காரனுக்கு உதவி செய்கிறாரோ அல்லது அடைக்கலம் கொடுக்கிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டு. அவருடைய கடமையான, உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
16) உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் இறுதித் தீர்ப்புக்காக விட்டுவிட வேண்டும். (இப்னு ஹிஷாம்)
ஆன்மீகப் புரட்சிகள்
இதுபோன்ற நுட்பமிக்க சட்டங்களால் நபி (ஸல்) புதிய சமூகத்தின் அஸ்திவாரங்களை உறுதியுடன் நிறுவினார்கள். அந்த சமூகத்தின் வெளித்தோற்றம் அது கொண்டிருந்த ஆன்மீக சிறப்புகளின் பிரதிபலிப்பாக இருந்தது. இந்த உயர்வான ஆன்மீக சிறப்புகளை அந்த மேன்மக்கள் நபி (ஸல்) அவர்களின் தோழமையால் பெற்றிருந்தனர். மேலும், நபி (ஸல்) அவர்களும் அவ்வப்போது அவர்களுக்கு மார்க்கச் சட்டங்களையும், சமூக உயர்வுக்கு வழிகாட்டும் நல்லொழுக்கங்களையும் போதித்து வந்தார்கள். அவர்களின் உள்ளங்களை ஒவ்வொரு அசுத்தத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியதுடன் உயர் பண்புகளைக் கடைபிடிக்கவும் அவர்களுக்கு ஆர்வமூட்டினார்கள். அன்பு, சகோதரத்துவம், கண்ணியம், இறைவணக்கம், கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கப் பயிற்சியும் அளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சில ஒழுக்கப் பயிற்சிகளையும், போதனைகளையும் பின்வரும் வரிகளில் நாம் பார்ப்போம்:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “இஸ்லாமில் சிறந்த அமல் எது?” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் “உணவளிப்பது, தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் சொல்வது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன் நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர்களது முகத்தை நன்கு உற்று நோக்கியபோது அது பொய்யன் முகம் அல்ல என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சில் முதலாவதாக பின்வரும் உபதேசங்களே இடம் பெற்றன. “மக்களே! ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள் உணவளியுங்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள் இரவில் மக்கள் உறங்கும்போது நீங்கள் எழுந்து தொழுங்கள் நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்.” (ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)
மேலும் கூறினார்கள்: யாருடைய தீங்குகளால் ஒருவன் அண்டை வீட்டார் நிம்மதியற்று போவாரோ அவர் சுவனம் செல்லமாட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) கூறினார்கள்: எவன் நாவு, கையின் தீங்கிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றார்களோ அவரே முஸ்லிமாவார். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை நீங்கள் இறைநம்பிக்கையாளராக மாட்டீர்கள்.
நபி (ஸல்) கூறினார்கள் “அனைத்து முஃமின்களும் ஒரே மனிதரைப் போலாவர். அவன் கண்ணுக்கு வலி என்றால் அவன் உறுப்புகள் அனைத்தும் வருந்துகின்றன. அவருக்கு தலைவலி ஏற்பட்டால் அனைத்து உறுப்புகளும் அதனால் வேதனை அடைகின்றன.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) கூறினார்கள்: “ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) மற்றொரு முஃமினுக்கு ஒரு கட்டடத்தைப் போன்றாவார். கட்டடத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிக்கு வலு சேர்க்கிறது.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)