பக்கம் - 209 -
தோழர்கள் நபி (ஸல்) அவர்களைப் இவ்வாறு பாதுகாத்தது சில இரவுகளில் மட்டுமல்ல மாறாக, மதீனா வந்ததிலிருந்து தொடர்ந்து நபித்தோழர்களில் யாராவது ஒருவர் இரவில் கண் விழித்து நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்.
இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்: இரவில் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் யாராவது ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பார்.
(நம்முடைய) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை (எந்த குறைவுமின்றி மக்களுக்கு) அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யா விட்டால் அவனுடையத் தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்கள்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 5:67)
என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கியவுடன் நபி (ஸல்) தாங்கள் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து தலையை வெளியே நீட்டி “மக்களே! என்னிடமிருந்து திரும்பிச் செல்லுங்கள்! அல்லாஹ் என்னை நிச்சயமாகப் பாதுகாத்து விட்டான்” என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)
ஆபத்து நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களுக்கும் இருந்தது. இதைப் பற்றி உபை இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்களும் முஹாஜிர் தோழர்களும் மதீனாவில் அன்சாரிகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதைச் சகித்துக்கொள்ள முடியாமல் குறைஷிகளும், மற்ற அரபுகளும் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்தனர். இதன் காரணமாக நபித்தோழர்கள் இரவு தூங்கும் போதும் காலையில் விழிக்கும் போதும் தற்காப்புக்காக ஆயுதங்களைத் தங்களுடன் வைத்திருந்தனர்.
போர் புரிய அனுமதி
முஸ்லிம்கள் மதீனாவில் கடுமையான ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், குறைஷிகள் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகிக் கொள்ளாமல் வம்புத்தனத்தையும், அழிச்சாட்டியத்தையும் தொடர்ந்து கொண்டே சென்றனர். இதன் காரணமாக அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பவர்களை எதிர்த்துப் போர் புரியலாம் என்று அனுமதி வழங்கினான். ஆனால், போரைக் கடமையாக்கவில்லை. நிராகரிப்பவர்கள் சண்டையிட்டால், அவர்களை எதிர்த்து போர் புரிய மட்டும் அனுமதிக்கப்பட்டது.
(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:39)
மேலும், இவ்வாறு அறப்போர் செய்வது அனுமதிக்கப்பட்டதற்குரிய காரணத்தையும் அடுத்துள்ள வசனங்களில் அல்லாஹ் விவரித்தான். அதாவது, அசத்தியத்தை அழித்து அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காகத்தான் போர் செய்வது அனுமதிக்கப்பட்டது.