பக்கம் - 21 -
சில நாட்களுக்குப் பிறகு ஹுலைல் காலமானார். அப்போது குஜாஆ மற்றும் குறைஷியருக்கிடையில் சண்டை மூண்டது. இதில் குஸய்யும் அவரைச் சேர்ந்தவர்களும் மக்காவின் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
இச்சண்டை மூண்டதற்குரிய காரணங்களைப் பற்றி மூன்று கருத்துக்கள் கூறப்படுகின்றன.
1) குஸய் மக்காவில் நன்கு புகழ்பெற்றார். அவரது செல்வங்களும் குடும்பங்களும் பெருகின. தனது மாமனார் ஹுலைல் மரணமான பிறகு குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தாரை விட தானே கஅபாவையும் மக்காவையும் நிர்வகிப்பதற்குத் தகுதியானவர்; அதுமட்டுமின்றி, குறைஷியர்தான் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் தலைமைத்துவம் மிக்கவர்கள் என எண்ணினார். ஆகவே, குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தாரை மக்காவிலிருந்து வெளியேற்றுவதற்கு கினானா மற்றும் குறைஷி கோத்திரத்தாரிடம் குஸய்ம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் அதை ஒப்புக்கொள்ளவே இவர்கள் அவர்கள் மீது போர் தொடுத்தனர்.
2) கஅபா மற்றும் மக்காவை நிர்வகிக்க வேண்டும் என குஸய்ம்க்கு ஹுலைல் தனது மரண நேரத்தில் கட்டளையிட்டார். ஆனால் அதற்கு குஜாஆவினர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இரு தரப்பினடையே போர் மூண்டது.
3) ஹுலைல் தனது மகள் ஹுப்பாவிற்கு கஅபாவை நிர்வகிக்கும் அதிகாரத்தை வழங்கினார். அவள் சார்பாக அப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கு குஜாஆ வமிசத்தைச் சேர்ந்த ‘அபூ குபுஷான்’ என்பவரை குஸய் நியமித்தார். அவர் ஹுப்பாவுக்கு பதிலாக கஅபாவை நிர்வகித்து வந்தார். அவர் சற்று புத்தி சுவாதீனமற்றவராக இருந்தார். ஹுலைல் மரணமடைந்த பிறகு குஸய் அபூ குபுஷானுக்கு சில ஒட்டகங்கள் அல்லது சில மதுப் பீப்பாய்கள் கொடுத்து கஅபாவின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இதை குஜாஆவினர் ஒப்புக் கொள்ளவில்லை. குஸய் கஅபாவை நிர்வகிக்கக்கூடாது என தடுத்தனர். இதனால் குஸய் மக்காவிலிருந்து குஜாஆவினரை வெளியேற்றுவதற்காக குறைஷி மற்றும் கினானா கோத்திரத்தினரின் உதவியை நாடினார். அவர்களும் அதற்கிணங்கியதால் இரு தரப்பினருக்கிடையே போர் மூண்டது. (ஃபத்ஹுல் பாரி, மஸ்வூதி)
காரணங்கள் எதுவாக இருப்பினும் நிகழ்வுகள் பின்வருமாறு அமைந்தன:
ஹுலைல் மரணமடைந்த பிறகும் ஸூஃபாக்கள் தங்களின் மேற்கூறப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றி வந்தனர். ஒருநாள் குறைஷி மற்றும் கினானா கோத்திரத்தினரை குஸய் தன்னுடன் அழைத்துக் கொண்டு ‘ஸூஃபா“க்கள் கூடியிருந்த கணவாய்க்கு வந்து “இந்த பொறுப்புக்கு உங்களைவிட நாங்களே அதிக உரிமையுள்ளவர்கள்” என்று கூறினார். இரு பிரிவினருக்கும் இடையில் வாய் சண்டை மூண்டு கைகலப்பு ஏற்பட்டது. இறுதியில் ஸூஃபாக்களை தோற்கடித்து குஸய் விரட்டிவிட்டார். இது குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தாருக்கு பிடிக்காததால் குஸய்யிடமிருந்து விலகிச் சென்றார்கள். இதையறிந்த குஸய் அவர்களுக்கு எதிராகப் படையைத் திரட்டி அவர்கள் மீது போர் தொடுத்தார். இரு பிரிவினருக்குமிடையே மிகக் கடுமையான போர் மூண்டு இருதரப்பிலும் பெருத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது. ஒரு வழியாக இரு தரப்பினரும் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள முன்வந்தனர். அவ்வுடன்படிக்கைக்கு பக்ர் கோத்திரத்தைச் சேர்ந்த ‘யஃமுர் இப்னு அவ்ஃப்’ என்பவரைத் தலைவராக்கினர்.
“மக்காவை ஆட்சி செய்யவும், கஅபாவை நிர்வகிக்கவும் குஜாஆ கோத்திரத்தாரைவிட குஸய்ம்க்கே அதிக தகுதி உண்டு குஸய்யினால் ஏற்பட்ட அனைத்து கொலைகளும் மன்னிக்கப்பட்டவை அவ்வாறே குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு அவர்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும். கஅபாவின் நிர்வாகத்தை குஸய்யிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று யஃமூர் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பின் காரணமாக அவருக்கு ‘ஷத்தாக் - அநீதத்தைத் தகர்த்தவர்’ என்ற புனைப்பெயர் வந்தது. (இப்னு ஹிஷாம்)