பக்கம் - 221 -
இஸ்லாமியப் படையும் அதற்கு தளபதிகள் நியமிக்கப்படுவதும்

நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேற ஆயத்தமானார்கள். அவர்களுடன் 310ற்கும் மேற்பட்டவர்கள் (313 அல்லது 314 அல்லது 317) வீரர்கள் வெளியேறினார்கள். அதாவது 82 அல்லது 83 அல்லது 84 முஹாஜிர்களும், அவ்ஸ் கிளையைச் சேர்ந்த 61 அன்ஸாரிகளும், கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த 170 அன்ஸாரிகளும் இருந்தனர். மதீனாவிலிருந்து வெளியேறும் போது எவ்வித ஆரவாரமும் இல்லாமல் குறைவான தயாரிப்புடன்தான் முஸ்லிம்கள் சென்றார்கள். முஸ்லிம்களிடம் ஒன்று அல்லது இரண்டு குதிரைகளே இருந்தன. ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் மிக்தாது இப்னு அஸ்வத் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் இருந்தது. மேலும், 70 ஒட்டகங்கள் மட்டும் இருந்தன. அதில் ஓர் ஒட்டகத்திற்கு இருவர் அல்லது மூவராக மாறிமாறி பயணம் செய்தனர். நபி (ஸல்) மற்றும் அலீ, மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் கனவி (ரழி) ஆகிய மூவரும் ஒரே ஒட்டகத்தில் மாறிமாறி பயணம் செய்தனர்.

இம்முறை மதீனாவிற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் பிரதிநிதியாக அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை நபி (ஸல்) நியமித்தார்கள். நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேறி ‘ரவ்ஹா’ என்ற இடத்தை அடைந்த போது அபூலுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்து மதீனா அனுப்பி வைத்தார்கள்.

இப்போருக்கான பொதுவான தலைமைத்துவத்தின் வெள்ளைக் கொடியை ‘முஸ்அப் இப்னு உமைர் அல்குறைஷி அல்அப்த’ (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள்.

படையை இரண்டு பிரிவாக ஆக்கினார்கள்.

1) முஹாஜிர்களின் படை: இதற்குரிய கொடியை அலீ இப்னு அபூ தாலிப் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இக்கொடிக்கு ‘உகாப்’ என்று சொல்லப்பட்டது.

2) அன்ஸாரிகளின் படை: இதற்குரிய கொடியை ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த இரு படைகளின் கொடி கருப்பு நிறமுடையதாக இருந்தது.

படையின் வலப் பக்கப் பிரிவிற்கு ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இடப் பக்கப் பிரிவிற்கு மிக்தாது இப்னு அம்ர் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். நாம் முன்பு கூறியது போன்று இவ்விருவர்தான் குதிரை வீரர்களாக இருந்தார்கள். போரின் கடைசி பிரிவிற்கு கைஸ் இப்னு அபூ ஸஃஸஆ (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். மற்றபடி பொது தளபதியாகவும், படையை வழி நடத்துபவராவும் நபி (ஸல்) அவர்களே விளங்கினார்கள்.

இஸ்லாமியப் படை பத்ரை நோக்கி

நபி (ஸல்) அவர்கள் சரியான தயாரிப்பு இல்லாத இப்படையுடன் மதீனாவின் வலப் பக்கத்திலிருந்து வெளியேறி மக்காவை நோக்கிச் செல்லும் பிரதான பாதையில் சென்றார்கள். ‘ரவ்ஹா’ என்ற கிணற்றை அடைந்து, அங்கு தங்கிவிட்டு மக்காவின் பிரதான பாதையை தனது இடப்பக்கத்தில் விட்டுவிட்டு வலப்பக்கமாக ‘நாஸியா’ என்ற இடம் வழியாக வெளியேறி பத்ரை நோக்கி சென்றார்கள். ‘நாஸியா’ என்ற இடத்தின் ஓரமாக பயணித்து அங்குள்ள பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். அந்தப் பள்ளத்தாக்கிற்கு பெயர் ‘ருஹ்கான்’ எனப்படும். அது நாஸியா மற்றும் ‘ஸஃப்ரா’ என்ற இடத்திற்கு மத்தியிலுள்ள பள்ளத்தாக்காகும்.

பின்பு ஸஃப்ராவின் குறுகலான வழியாகச் சென்று ஸஃப்ராவை அடைந்தார்கள். ஸஃப்ரா என்ற இடத்தில் தங்கி, பஸ்பஸ் இப்னு அம்ர் அல் ஜுஹனி, அதி இப்னு அபூஸக்பா அல் ஜுஹ்னி (ரழி) ஆகிய இருவரையும் பத்ர் பள்ளத்தாக்கிற்கு அனுப்பி குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தின் செய்தியைத் துப்பறிந்து வருமாறு அனுப்பினார்கள்.