பக்கம் - 24 -
சிலர், குஸய்தான் தனது பிள்ளைகளுக்கிடையில் பொறுப்புகளை பங்கிட்டுக் கொடுத்தார். அந்த அடிப்படையிலேயே அப்பொறுப்புகளை அவரது பிள்ளைகள் நிறைவேற்றி வந்தனர் என்று கூறுகின்றனர். உண்மை நிலையை அல்லாஹ்வே அறிந்தவன். (இப்னு ஹிஷாம்)
குறைஷிகள் தங்களிடையே பங்கிட்டுக் கொண்ட மேற்கூறப்பட்ட பொறுப்புகளுடன் வேறு சில பதவிகளையும் உருவாக்கி, அவற்றைத் தங்களுக்கிடையே பங்கிட்டு ஒரு சிறிய அரசாங்கத்தை நிறுவிக்கொண்டனர். அது இன்றைய ஜனநாயக அரசு, தேர்தல், பாராளுமன்றம் ஆகிய நடைமுறைகளுக்கு ஒத்திருந்தது. அவர்கள் வகித்த பதவிகள் பின்வருமாறு:
1) நற்குறி, துற்குறி (சாஸ்த்திரங்கள், சகுனங்கள்) பார்ப்பதும், அனுமதி பெறுவதும், சிலைகளுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் அம்புகளைக் கொண்டு குறி சொல்லும் அதிகாரமும் ஜுமஹ் குடும்பத்தாருக்கு இருந்தன.
2) சிலைகளுக்கு அளிக்கப்படும் காணிக்கைகள் மற்றும் நேர்ச்சைகளைப் பெற்று பாதுகாத்து பராமரித்தல்; சண்டை, சச்சரவுகள் மிக்க வழக்குகளில் தீர்ப்பு சொல்வது ஆகிய இரு பொறுப்புகளும் ஸஹ்ம் குடும்பத்தாருக்கு இருந்தன.
3) அஸத் குடும்பத்தாருக்கு, ஆலோசனை கூறும் பொறுப்பு!
4) தைம் குடும்பத்தாருக்கு, அபராதம் மற்றும் தண்டப் பரிகாரம் வழங்கும் பொறுப்பு!
5) உமய்யா குடும்பத்தாருக்கு, சமுதாயக்கொடி ஏந்திச் செல்லும் பொறுப்பு!
6) மக்ஜூம் குடும்பத்தாருக்கு, ராணுவங்களையும் அதற்குத் தேவையான குதிரைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு!
7) அதீ குடும்பத்தாருக்கு, தூது கொண்டு செல்லும் பொறுப்பு! (இப்னு ஹிஷாம்)
உ) ஏனைய அரபியர்களின் ஆட்சி அதிகாரம்
கஹ்தானியர், அத்னானியர் நாடு துறந்ததையும் அவர்கள் அரபு நாடுகளை தங்களுக்கிடையில் பிரித்துக் கொண்டதையும் முன்பு கண்டோம். இவர்களில் ஹீரா நாட்டுக்கு அருகிலிருந்தவர்கள் ஹீராவின் அரபிய மன்னருக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர். ஷாம் நாட்டில் வசித்தவர்கள் கஸ்ஸானிய அரசர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர். எனினும், கட்டுப்பாடு என்பது வெறும் பெயரளவில்தான் இருந்தது. இவ்விரண்டைத் தவிர தீபகற்பத்தின் ஏனைய கிராமப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் முழுச் சுதந்திரம் பெற்றவர்களாக எவருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து வந்தனர்.
இந்த இரண்டு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கெனத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு கோத்திரமும் ஒரு சிறிய அரசாங்கத்தைப் போன்று இருந்தது. குலவெறியும், தங்களது ஆதிக்கப் பகுதிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் இவர்களது அரசியல் அடிப்படை நோக்கமாக இருந்தது.
அரசர்களுக்கு இணையாக கோத்திரத் தலைவர்களுக்கு மதிப்பு இருந்தது. சண்டையிடுவதிலும், சமாதானம் செய்து கொள்வதிலும் மக்கள் தங்களது தலைவர்களின் முடிவை எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்று வந்தனர். தலைவர்களின் உத்தரவும் அதிகாரமும் பேரரசர்களின் உத்தரவுக்கும் அதிகாரத்துக்கும் ஒத்திருந்தது. அவர் ஏதேனும் ஒரு சமுதாயத்தினர் மீது கோபம் கொண்டால் எவ்வித கேள்வியுமின்றி ஆயிரக்கணக்கான வாள்கள் அந்த சமுதாயத்தினருக்கு எதிராக உயர்த்தப்படும். எனினும், அவர்கள் தலைமைக்காக தங்களது தந்தையுடைய சகோதரர்களின் (தந்தையின் உடன்பிறந்தார்) பிள்ளைகளிடமே போட்டியிட்டுக் கொண்டனர்.