பக்கம் - 241 -
1) இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் “ஹாஷிம் கிளையைச் சேர்ந்த சிலரையும் மற்றும் சிலரையும் நான் அறிவேன். அவர்கள் நிர்பந்தமாக போருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நம்மிடம் சண்டை செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு எவ்வித விருப்பமும் இல்லை. எனவே, ஹாஷிம் கிளையைச் சேர்ந்த எவரையும் நீங்கள் கொன்றுவிட வேண்டாம். மேலும், அபுல் பக்த இப்னு ஷாமையும் கொன்றுவிட வேண்டாம். அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபையும் கொன்றுவிட வேண்டாம். அவர் நிர்ப்பந்தமாகத்தான் அழைத்து வரப்பட்டிருக்கிறார்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இவ்வார்த்தையைக் கேள்விப்பட்ட உத்பாவின் மகன் அபூஹுதைஃபா “என்ன! எங்களது பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அப்பாஸை மட்டும் விட்டுவிட வேண்டுமா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவரைச் சந்தித்தால் வாளால் அவருக்கும் கடிவாளமிடுவேன்” என்றார். இவ்வார்த்தையை நபி (ஸல்) கேள்விப்பட்டபோது உமரிடம் “அபூஹப்ஸே! அல்லாஹ்வின் தூதருடைய சிறிய தந்தையின் முகத்தை வாளால் வெட்டுவது நியாயமாகுமா?” என்று வருத்தப்பட்டார்கள். உமர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! என்னை அனுமதியுங்கள். அபூ ஹுதைஃபாவின் கழுத்தை வாளால் வெட்டி வீசிகிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் நயவஞ்சகராகி விட்டார்” என்றார்கள்.
தான் கூறிய சொல்லை நினைத்து அபூஹுதைஃபா எப்போதும் கவலைப்படுவார். “இந்த வார்த்தையைக் கூறிய அன்றிலிருந்து நான் நிம்மதியாக இல்லை. இந்த வார்த்தையின் விளைவை எண்ணி பயந்துகொண்டே இருக்கிறேன், அல்லாஹ்வே இறைவன் என்று நான் சாட்சியம் கூறுவதுதான் அந்தக் குற்றம் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக ஆகலாம்” என்று அபூஹுதைஃபா (ரழி) ஆதரவு வைப்பார்.
அபூஹுதைஃபா (ரழி) அபூபக்ர் (ரழி) அவர்களின் ஆட்சியின் போது யமாமாவில் நடந்த போரில் வீரமரணம் எய்தினார்.
2) மேலும் நபி (ஸல்), அபுல் பக்தயைக் கொலை செய்யக் கூடாதென்று தடுத்திருந்தார்கள். ஏனெனில், அவர் மக்காவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பளித்தவர் அவர் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை அளித்ததில்லை நபி (ஸல்) வெறுக்கும்படியான எந்தவொரு காரியத்தையும் அவர் செய்ததில்லை. மேலும் ஹாஷிம், முத்தலிப் கிளையினரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று எழுதப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தை கிழிப்பதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.
இவ்வாறிருந்தும் அபுல் பக்த போரில் கொல்லப்பட்டார். அதற்குக் காரணம், முஜத்தர் இப்னு ஜியாது (ரழி) என்ற நபித்தோழர் அபுல் பக்தயையும் அவன் நண்பரையும் போரில் சந்தித்தார். இவ்விருவரும் ஒன்றாக சேர்ந்து முஸ்லிம்களுடன் போர் செய்து கொண்டிருந்தனர். அப்போது முஜத்தர் “அபுல் பக்தயே! உன்னைக் கொல்லக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் தடுத்திருக்கிறார்கள், எனவே, நீங்கள் விலகிவிடுங்கள்” என்றார். அதற்கு “எனது தோழரையும் கொல்லக் கூடாதென்று அவர் கூறியிருக்கிறாரா?” என்றார். அதற்கு முஜத்தர் “இல்லை. உன் நண்பரைக் கொல்லாமல் நாங்கள் விடமாட்டோம்” என்றார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் ஒன்றாகவே சாவோம்” என்று அபுல் பக்த கூறினார். பின்பு முஜத்தருடன் அவர் சண்டையிடவே முஜத்தர் அவரைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.
3) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: நானும் உமையா இப்னு கலஃபும் மக்காவில் இஸ்லாம் வருவதற்கு முன்பே நண்பர்களாக இருதோம். பத்ர் போர் அன்று போரில் எனக்குக் கிடைத்த கவச ஆடைகளுடன் உமையாவுக்கு அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது உமையா தனது மகன் அலீ இப்னு உமையாவின் கையை பிடித்தவனாக சரணடைவதற்காக நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்த உமையா “என்னை நீ கைதியாக்கிக் கொள்ள வேண்டாமா? உன்னிடமுள்ள இந்த கவச ஆடைகளைவிட நான் சிறந்தவனல்லவா? இன்றைய தினத்தைப் போல் ஒரு நாளை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு பால் கொடுக்கும் ஒட்டகங்கள் வேண்டாமா? என்னை யாராவது சிறைப் பிடித்தால் நிறைய பால் கொடுக்கும் ஒட்டகங்களை பிணையாக நான் தருவேன்” என்று கூறினான். இந்த வார்த்தையைக் கேட்டவுடன் உருக்குச் சட்டைகளைக் கீழே போட்டுவிட்டு அவ்விருவரையும் இரு கைகளில் பிடித்துக் கொண்டேன். அப்போது உமையா, “தீக்கோழியின் இறகை தன் நெஞ்சில் சொருகியிருக்கும் அந்த மனிதர் யார்?” என்று கேட்டான். “அவர்தான் ஹம்ஜா” என்றேன். அதைக் கேட்ட உமய்யா “அவர்தான் எங்களுக்கு இப்போரில் நிறைய அழிவுகளை ஏற்படுத்தியவர்” என்றான்.