பக்கம் - 250 -
பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் “கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?” எனக் கேட்டார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஜா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஜா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்” என்று உமர் (ரழி) கூறினார்கள்.
அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். ஈட்டுத் தொகை ஆயிரம் வெள்ளி நாணயங்களிருந்து நான்காயிரம் வெள்ளி நாணயங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டது. மக்காவாசிகள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். மதீனாவாசிகளுக்கு எழுத, படிக்கத் தெரியாது. எனவே, ஈட்டுத் தொகை கொடுக்க இயலாத மக்கா கைதிகள் மதீனாவை சேர்ந்த பத்து சிறுவர்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். அவ்வாறு சிறுவர்களுக்கு நன்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
உமர் (ரழி) கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்) “ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன். அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது” என்றார்கள்.
இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:
(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68)
பல கைதிகளை நபி (ஸல்) ஈட்டுத் தொகை இல்லாமலே உரிமையிட்டார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முத்தலிப் இப்னு ஹன்தப், ஸைஃபி இப்னு அபூ ஃபாஆ, அபூ இஜ்ஜா ஜும ஆவர். இந்த அபூ இஜ்ஜா உஹதுப் போரிலும் முஸ்லிம்களுக்கு எதிராக சண்டையிட்டான். போரின் இறுதியில் கைதியாகப் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதன் விவரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் வர இருக்கிறது.