பக்கம் - 252 -
இரண்டாவதாக, முஸ்லிம்கள் தங்களது வீரம் மற்றும் துணிவைப் பார்த்து தற்பெருமைக்கு ஆளாகிவிடக் கூடாது. மாறாக, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும் தனக்கும் தனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகவேதான் முஸ்லிம்களுக்கு மறைவிலிருந்து செய்த உதவியை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.
மூன்றாவதாக, இந்த ஆபத்தானப் போரை நபி (ஸல்) அவர்கள் எந்த இலட்சியங்களையும், நோக்கங்களையும் முன்னிட்டு சந்தித்தார்களோ அவற்றை விரிவாக அல்லாஹ் கூறுகிறான். அதன் பிறகு போர்களில் வெற்றி பெறக் காரணமாக அமையும் தன்மைகளையும், குணங்களையும் முஸ்லிம்களுக்குக் குறிப்பிடுகிறான்.
நான்காவதாக, இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்கள், யூதர்கள், போரில் கைது செய்யப் பட்டவர்கள் ஆகியோருக்கு அல்லாஹ் அறிவுரை கூறுகிறான். சத்தியத்திற்குப் பணிந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிவுரை.
ஐந்தவதாக, போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் தொடர்பான சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான்.
ஆறாவதாக, போரிடுவது அல்லது சமாதானம் செய்து கொள்வது ஆகிய இவ்விரண்டின் அடிப்படைகள் மற்றும் சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான். அத்தகைய ஒரு காலக் கட்டத்தை அப்போது இஸ்லாமிய அழைப்புப்பணி அடைந்துவிட்டது என்பதே அதற்குக் காரணம். அதன் மூலமே முஸ்லிம்கள் புரியும் போருக்கும் அறியாமைக்கால மக்கள் செய்த போருக்கும் வேறுபாடு ஏற்படும் முஸ்லிம்கள் பிறரைப் பார்க்கிலும் தனித்தன்மை பெற்று, குணத்திலும் பண்பிலும் மேலோங்கி விளங்குவார்கள். மேலும், உலக மக்கள் இஸ்லாமை ஒரு தத்துவ சிந்தனையாக (சித்தாந்தமாக) மட்டும் பார்க்காமல், தான் அழைக்கும் அடிப்படைகளை கொண்டு தன்னைச் சார்ந்தோரைப் பண்பட செய்யும் ஒரு வாழ்க்கை நெறியாக இஸ்லாமைப் பார்ப்பார்கள்.
ஏழாவதாக, இஸ்லாமிய நாட்டுக்குரிய அடிப்படை சட்டங்களை அல்லாஹ் நிர்ணயிக்கின்றான். அதாவது, இஸ்லாமிய அரசாங்கத்திற்குள் வாழும் முஸ்லிம்களுக்கும் அதற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களுக்குமிடையில் சட்ட வித்தியாசங்கள் உள்ளன என்பதே அது.
ஹிஜ் இரண்டாம் ஆண்டு, ரமழான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது. ‘ஜகாத்துல் ஃபித்ர்’ எனப்படும் நோன்புப் பெருநாள் கொடையும் அந்த ஆண்டுதான் கடமையாக்கப்பட்டது, இதர பொருட்களுக்குரிய ‘ஜகாத்’ எனப்படும் மார்க்க வரிகளின் அளவுகளும் இந்த ஆண்டுதான் விவரிக்கப்பட்டன. இது பூமியில் பயணித்து, பொருள் ஈட்ட முடியாமல் சிரமத்தில் வாடி வதங்கிய பெரும்பாலான ஏழை முஹாஜிர்களின் (மதீனாவில் வாழும் மக்கா முஸ்லிம்களின்) பொருளாதாரச் சுமையை எளிதாக்கியது.