பக்கம் - 256 -
உமைர் இப்னு வஹப் அல் ஜும மற்றும் ஸஃப்வான் இப்னு உமைய்யா ஆகிய இருவரும் கஅபாவிற்கருகில் அமர்ந்தனர். இது பத்ர் போர் முடிந்து, சில நாட்கள் கழித்து நடந்ததாகும். இந்த உமைர், குறைஷி ஷைத்தான்களில் மிகப் பெரிய ஷைத்தானாவான். நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் மக்காவில் அதிகம் நோவினை செய்தவர்களில் இவனும் குறிப்பிடத்தக்கவன். இவனது மகன் வஹப் இப்னு உமைரை முஸ்லிம்கள் பத்ர் போரில் சிறைப்பிடித்தனர். பத்ரில் கொலை செய்யப்பட்டவர்களையும், முஸ்லிம்களால் தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் ஸஃப்வானுக்கு உமைர் நினைவூட்டினான். அதற்கு ஸஃப்வான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களுக்குப் பின் வாழ்ந்து ஒரு பலனும் இல்லை” என்றான்.
அதற்கு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ உண்மையே கூறினாய். அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னால் நிறைவேற்ற முடியாத அளவுக்கு கடன் சுமையும் எனக்குப் பின் சீரழிந்து விடுவார்கள் என்று நான் பயப்படும் குடும்பமும் எனக்கு இல்லையெனில் நேரில் சென்று முஹம்மதை நானே கொல்வேன். எனது மகன் அவர்களிடம் கைதியாக இருப்பதால் நான் அவர்களிடம் செல்வதற்கு அது ஒரு காரணமாகவும் இருக்கிறது” என்றான் உமைர்.
ஸஃப்வான் இதை நல்ல சந்தர்ப்பமாகக் கருதி, “உனது கடனை நான் நிறைவேற்றுகிறேன். உனது குடும்பத்தை எனது குடும்பத்துடன் நான் சேர்த்துக் கொள்கிறேன். அவர்கள் வாழும் காலமெல்லாம் நான் அவர்களுக்கு உதவி செய்வேன். என்னிடம் இருக்கும் எதையும் அவர்களுக்கு நான் கொடுக்காமல் இருக்க மாட்டேன்” என நயமாகப் பேசி, உமைரை இத்தீய செயலுக்குத் தூண்டினான்.
சரி! “நமது பேச்சை மறைத்துவிடு. யாரிடமும் சொல்லாதே” என்று உமைர் கூற, “அப்படியே செய்கிறேன்” என்றான் ஸஃப்வான்.
உமைர் தனது வாளைக் கூர்மைப்படுத்தி அதில் நன்கு விஷம் ஏற்றினான். அந்த வாளுடன் மதீனா புறப்பட்டான். கொலை வெறியுடன் அதிவிரைவில் மதீனா சென்றடைந்தான். நபி (ஸல்) அவர்களின் பள்ளிக்கு அருகில் தனது ஒட்டகத்தைப் படுக்க வைத்தான். அப்போது உமர் (ரழி) பள்ளிக்குள் முஸ்லிம்களுடன் பத்ர் போரில் அல்லாஹ் தங்களுக்கு செய்த உதவியைப் பற்றிய பேச்சில் ஈடுபட்டிருந்தார்கள். சரியாக உமர் (ரழி) அவர்களின் பார்வை உமைர் மீது பட்டது. “இதோ நாய்! அல்லாஹ்வின் எதிரி! தனது வாளைத் தொங்கவிட்டவனாக வந்துள்ளான். இவன் ஒரு கெட்ட நோக்கத்திற்காகத்தான் வருகிறான்” என்று சப்தமிட்டவராக நபி (ஸல்) அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி உமைர், தனது வாளை அணிந்தவனாக இங்கு வருகிறான்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) “என்னிடம் அவரை அழைத்து வாருங்கள்” என்றார்கள். உமர் (ரழி) அன்சாரிகளில் சிலரிடம் “நீங்கள் சென்று நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அமருங்கள். இந்த கெட்டவனின் தீங்கிலிருந்து நபி (ஸல்) அவர்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவனை நம்ப முடியாது” என்று கூறியபின் உமைன் வாளுறையை அவரது பிடரியுடன் இழுத்துப் பிடித்தவராக நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். இக்காட்சியைப் பார்த்த நபி (ஸல்) “உமரே! அவரை விட்டு விடுங்கள்” என்று கூறி, “உமைரே! இங்கு வாரும்” என்றார்கள். அப்போது உமைர் “உங்களின் காலைப் பொழுது பாக்கிய மாகட்டும்” என்று முகமன் கூறினார். அதற்கு நபி (ஸல்) “உமைரே! உமது இந்த முகமனை விட சிறந்த முகமனாகிய சுவனவாசிகளின் ‘ஸலாம்’ என்ற முகமனைக் கொண்டு அல்லாஹ் எங்களை சங்கைப்படுத்தி இருக்கிறான்” என்றார்கள்.