பக்கம் - 259 -
யூதர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் செய்த குழப்பங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இது ஓர் உதாரணமாகும். இவ்வாறு இஸ்லாமிய அழைப்புப் பணிக்கும் தடைகளை ஏற்படுத்த பல வழிகளைக் கையாண்டனர். பல பொய் பிரச்சாரங்களைச் செய்தனர். காலையில் இஸ்லாமை ஏற்று, அன்று மாலையில் நிராகரித்து விடுவார்கள். இதனால் புதிய, பலவீனமான முஸ்லிம்களுடைய உள்ளங்களில் இஸ்லாமைப் பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்தினர். மேலும், தங்களுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு நெருக்கடி தந்தனர். முஸ்லிம்கள் தங்களுக்குக் கடன் கொடுக்க வேண்டியிருந்தால் காலையிலும் மாலையிலும் சென்று அந்த கடனைக் கேட்டுத் துன்புறுத்துவர். முஸ்லிம்களுக்கு இவர்கள் ஏதும் கொடுக்க வேண்டியிருந்தால் அதைக் கொடுக்காமல் மறுப்பார்கள். தங்களிடமுள்ள முஸ்லிம்களின் சொத்துகளை அநியாயமாகத் தின்று வந்தனர். முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன்களைக் கொடுக்காமல் “நீ உமது மூதாதையரின் மார்க்கத்தில் இருந்த போதுதான் இந்த கடன் எங்கள் மீது இருந்தது. நீ மதம் மாறியதால் இப்போது நாங்கள் அதனைக் கொடுக்க வேண்டியதில்லை” என்று கூறுவார்கள்.
நாம் மேற்கூறிய நிகழ்வுகள் பத்ர் போருக்கு முன் நடந்தவைகள். இந்த யூதர்கள் நபி (ஸல்) அவர்களுடன் உடன்படிக்கை செய்திருந்தும் அதை மதிக்காமல் நடந்தனர். இவர்கள் நேர்வழி பெறுவார்கள் என்பதற்காகவும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் இவர்களின் அக்கிரமங்களை நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சகித்து வந்தார்கள்.
கைனுகாவினர் ஒப்பந்தத்தை முறிக்கின்றனர்
பத்ர் மைதானத்தில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் மாபெரும் உதவி செய்தான். அதனால் முஸ்லிம்களைப் பற்றிய மதிப்பு, மரியாதை மற்றும் பயம், உள்ளூர்வாசிகள் - வெளியூர்வாசிகள் என அனைவரின் உள்ளத்திலும் ஏற்பட்டன. இது யூதர்களுக்கு வெறுப்பை ஊட்டியது. அவர்களது கோபத்தைக் கிளறியது இதனால் வெளிப்படையாகவே முஸ்லிம்களை எதிர்த்தனர் அவர்களுக்குத் தீங்கு செய்தனர்.
யூதர்களில் ‘கஅப் இப்னு அஷ்ரஃப்’ என்பவன் முஸ்லிம்களுக்கு பெரிய எதிரியாக விளங்கினான். அவ்வாறே யூதர்களில் இருந்த மூன்று பிரிவினர்களில் கைனுகா கிளையினரே மிகக் கெட்டவர்களாக இருந்தனர். இவர்கள் மதீனாவினுள் வசித்தனர். சாயமிடுதல், இரும்பு பட்டறை, பாத்திரங்கள் செய்வது என்று பல தொழில்கள் இவர்கள் வசம் இருந்தன. இதுபோன்ற தொழில்களில் இவர்கள் இருந்ததால் இவர்களிடம் பெருமளவில் போர் சாதனங்கள் இருந்தன. மதீனாவிலிருந்த யூதர்களில் இவர்களே வீரமுடையவர்களாக விளங்கினர். யூதர்களில் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுடன் செய்த உடன்படிக்கையை முறித்தவர்கள் இவர்களே.
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு பத்ரில் கொடுத்த வெற்றிக்குப் பிறகு இவர்களது அத்துமீறல் கடுமையானது அராஜகம் அதிகரித்தது இவர்கள் மதீனாவில் குழப்பங்களை ஏற்படுத்தினர் முஸ்லிம்களைப் பரிகாசம் செய்தனர் தங்களது கடைவீதிகளுக்கு வரும் முஸ்லிம்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இடையூறு அளித்தனர்.
இவர்களை ஓர் இடத்தில் ஒன்றிணைத்து நபி (ஸல்) அறிவுரை வழங்கினார்கள். நேர்வழிக்கும் நன்னெறிக்கும் அழைத்தார்கள். அத்து மீறல், பகைமை கொள்ளல், தீங்கு விளைவித்தல் ஆகியவற்றின் பின்விளைவைப் பற்றி எச்சரித்தார்கள். ஆனால், நபி (ஸல்) எச்சரித்தும் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகாமல் அதிலேயே நிலைத்திருந்தனர்.